மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து 2 வயது குழந்தை படுகாயம் - 4 பேர் கைது

மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து 2 வயது குழந்தை படுகாயமடைந்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்,
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 8-வது பிளாக்கை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி கவுசல்யா. இந்த தம்பதிக்கு 2 வயதில் புகழ்வேலன் என்ற ஆண் குழந்தை உள்ளது. நேற்று பாலமுருகன் தனது மனைவி கவுசல்யா மற்றும் குழந்தையுடன் பைக்கில் வியாசர்பாடியில் இருந்து பேசின் பாலம் செல்ல அசோக் பில்லர் ரெயில்வே மேம்பாலம் மீது சென்று கொண்டிருந்தார்.

குழந்தையை பைக்கின் முன்னால் அமர வைத்திருந்த நிலையில் திடீரென மாஞ்சா நூல் காத்தாடி குழந்தையின் கழுத்தில் சிக்கிக் கழுத்தை அறுத்தது. உடனே பாலமுருகன் மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்தி பார்த்தபோது கழுத்தில் இருந்து ரத்தம் கொட்டியது. பின்னர் குழந்தையை எம்.கே.பி. நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு குழந்தைக்கு கழுத்தில் ஏழு தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுபோல் அதே பகுதியில் பைக்கில் சென்ற ராயபுரத்தைச் சேர்ந்த திலானி பாஷா என்பவரின் கழுத்திலும் மாஞ்சா நூல் அறுத்து காயமடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மாஞ்சா நூல் காத்தாடியை பறக்கவிட்டவர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து 2 வயது குழந்தை படுகாயமடைந்த சம்பவத்தில் கல்லூரி மாணவர், பள்ளி மாணவர் உட்பட 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றொரு சம்பவத்திலும் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 100-க்கும் மேற்பட்ட பட்டங்கள், லொட்டாய் மற்றும் மாஞ்சா நூல்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com