

மதுரை,
திருமங்கலம் அருகே 4 வயது குழந்தை கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பாரபத்தி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி முருகன். இவரது மனைவி நாச்சியம்மாள் ஆடு மேய்க்கும் தொழிலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகனான மோகன் (வயது 4) நேற்று மாலை வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தபோது மாயமானான்.
நாச்சியம்மாள் ஆடு மேய்த்து விட்டு மாலை 6 மணி அளவில் வீடு திரும்பியுள்ளார். வீட்டிற்கு வந்தவுடன் மகனை காணாமல் அருகிலுள்ள அனைத்து வீடுகளிலும் சென்று பார்த்துள்ளார். எங்கு தேடியும் மகன் கிடைக்காததால் தந்தை முருகன் கூடக்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து மாவட்ட எஸ்.பி தேவநாதனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர், எஸ்.பி. உத்தரவின் பேரில் பாரபத்தி கிராமத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், முருகனின் உறவினரான கிருஷ்ணா என்பவரின் மகன் மணி என்பவர் நேற்று இரவு சாக்குமூட்டை ஒன்றை தூக்கி சென்றது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து மணியை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வந்தனர். முதலில் குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்த மணி, சிறிது நேரத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். குழந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்து குவாரியில் தூக்கி போட்டு சென்றதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மணியை போலீசார் சம்பவ இடத்திற்கு அழைத்து சென்றனர்.
பின்னர் அங்கிருந்த சாக்குமூட்டையை கைப்பற்றி, அதில் இருந்த குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து கொலையாளியை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், முருகனுக்கும் தனக்கும் ஏற்கனவே தகராறு ஏற்பட்டதாகவும், இதனால் கஞ்சா போதையில் குழந்தையை கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.