ரேலா ஆஸ்பத்திரியில் 42 வயதான குஜராத் பெண்ணுக்கு வெற்றிகரமாக இரட்டை நுரையீரல் உறுப்பு மாற்று சிகிச்சை

ரேலா ஆஸ்பத்திரியில் 42 வயதான குஜராத் பெண்ணுக்கு வெற்றிகரமாக இரட்டை நுரையீரல் உறுப்பு மாற்று சிகிச்சை செய்து டாக்டர்கள் குழு சாதனை படைத்துள்ளனர்.
ரேலா ஆஸ்பத்திரியில் 42 வயதான குஜராத் பெண்ணுக்கு வெற்றிகரமாக இரட்டை நுரையீரல் உறுப்பு மாற்று சிகிச்சை
Published on

உறுப்பு மாற்று சிகிச்சையில் உலக அளவில் புகழ்பெற்ற ரேலா ஆஸ்பத்திரி, நுரையீரல் உறுப்பில் நார்த்திசு (ஐ.எல்.டி.) என்ற நோயால் பாதிக்கப்பட்ட திம்பால் ஷா என்ற குஜராத்தைச் சேர்ந்த 42 வயது பெண்மணிக்கு அதிக சிக்கலான இரட்டை நுரையீரல் உறுப்பு மாற்று சிகிச்சையை வெற்றிகரமாக செய்து சாதனை படைத்திருக்கிறது.

ஐ.எல்.டி. என்பது நுரையீரலில் உள்ள மிகச்சிறிய காற்றுப்பைகளை பாதிப்பதால், சுவாச பாதிப்பு ஏற்படுகிறது. புறாக்களின் கழிவுகள், எச்சங்களினால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

திம்பால் ஷா, புறாக்களை வளர்த்து வந்தார். இதனால் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு குஜராத் மட்டுமல்லாது மும்பை, டெல்லியிலும் மருத்துவ சிகிச்சைகள் பெற்றார். ஆனால் அங்கு குணமடையாததால் சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்தார். அவரது சிகிச்சைக்கான செலவுகளுக்கு 'கிரவுட்பண்டிங்' பரப்புரை வழியாகவும், அரசு மற்றும் ரேலா ஆஸ்பத்திரி வழங்கிய ஆதரவின் வழியாகவும் நிதி திரட்டப்பட்டது.

இவருக்கு இருபக்கமும் உள்ள நுரையீரல் உறுப்பு மாற்று சிகிச்சையை செய்ய ரேலா ஆஸ்பத்திரி டாக்டர்கள் குழு முடிவு செய்தது. இவருக்கு பொருத்தமான ஜோடி நுரையீரல்களுக்காக மாநிலத்தின் உறுப்புமாற்று பதிவகத்தில் பதிவு செய்யப்பட்டது.

இந்தநிலையில் மூளை சாவடைந்த ஆந்திராவைச் சேர்ந்த 19 வயதான இளம்பெண்ணின் ஒரு ஜோடி நுரையீரல்களை ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் இருந்து கொண்டுவரப்பட்டு ரேலா ஆஸ்பத்திரி டாக்டர்கள் குழுவின் மூலம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.

இது தொடர்பாக ரேலா ஆஸ்பத்திரியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பேராசிரியர் முகமது ரேலா, நிருபர்களிடம் கூறியதாவது:-

ரேலா ஆஸ்பத்திரியில் திம்பால் ஷாவுக்கு செய்யப்பட்டிருக்கும் வெற்றிகரமான இரட்டை நுரையீரல் உறுப்புமாற்று சிகிச்சை, நோயாளிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் ஆகிய இருதரப்பினரின் தளராத மனஉறுதிக்கும், டாக்டர்களின் நிபுணத்துவத்துக்கும் சாட்சியமாக உள்ளது.

பறவைகளின் கழிவுகள், எச்சங்கள், தூசி உள்ளிட்டவைகளை சுவாசிப்பதால் மனிதர்களுக்கு சரிசெய்ய இயலாத நுரையீரல் சேதம், மிகை உணர்திறன், மூச்சுப்பை அழற்சி மற்றும் நாள்பட்ட சுவாசப்பாதை செயலிழப்பு ஆகியவை ஏற்படக்கூடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தலைமை செயல் அலுவலர் டாக்டர் இளங்குமரன் கூறும்போது, "ரேலா ஆஸ்பத்திரி டாக்டர்கள் சிறப்பாக செயலாற்றி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் மேலும் ஒரு முன்னேற்றமாக நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளனர். பறவைகளால் சுவாச பாதிப்பு, அலர்ஜி போன்றவைகள் ஏற்படும்போது பொதுமக்கள் நோய் பாதிப்பு ஆரம்ப நிலையிலேயே ஆஸ்பத்திரிக்கு சென்று முறையான சிகிச்சை பெற்றால் கடுமையான பாதிப்புகளை தவிர்க்க முடியும்"என்றார்.

டாக்டர் ஆர்.மோகன் கூறும்போது, "வழக்கமான மருந்துகளும், சிகிச்சை முறைகளும் இனிமேலும் பயனளிக்காத கடும் பாதிப்பு நிலையை திம்பல் ஷாவின் உடல்நிலை எட்டியிருந்தது. உடலிலிருந்து கரியமில வாயுவை அகற்றுவதில் அப்பெண்ணின் நுரையீரல்கள் கடும் சிரமப்பட்டதன் காரணமாக உடனடியாக அவருக்கு உறுப்புமாற்று சிகிச்சை செய்வது அவசியமாக இருந்தது"என்றார்.

ரேலா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் திம்பால் ஷா, கூறும்போது, "வாழ்க்கையை எனக்கு திரும்பவும் தந்திருப்பதற்காக நான் என்றும் நன்றியுள்ளவராக இருப்பேன். குஜராத்தை சேர்ந்த என்னை காப்பாற்றிய தமிழக டாக்டர்களுக்கு நன்றி" என்றார்.

அப்போது மருத்துவக் குழுவை சேர்ந்த டாக்டர்கள் பிரேம் ஆனந்த் ஜான், சரண்யாகுமார், பென்னர் ஜோயல் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com