பெண்ணிடம் 5 பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு

நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் 5 பவுன் தங்கச்சங்கிலியை நூதன முறையில் பறித்த மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெண்ணிடம் 5 பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு
Published on

சிகிச்சைக்கு வந்தார்

நாமக்கல் அருகே உள்ள பொம்மசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் மாரியாயி (வயது56). கூலித்தொழிலாளி. இவர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் இவர் கடந்த 23-ந் தேதி நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வந்தார்.

அப்போது அவரை பரிசோதனை செய்த டாக்டர், ரத்த பரிசோதனை செய்து வருமாறு அறிவுறுத்தி உள்ளார். இதையடுத்து ரத்த பரிசோதனை நிலையம் சென்று ரத்தம் கொடுத்து விட்டு, நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு பரிசோதனை அறிக்கை வாங்க வந்தார்.

தங்கச்சங்கிலி பறிப்பு

அப்போது அங்கு வந்த சுமார் 40 வயதுடைய நபர், மாரியாயிடம் உங்களுக்கு அரசின் உதவித்தொகை வருகிறதா? என பேச்சு கொடுத்து உள்ளார். பின்னர் அவர் கையில் வைத்திருந்த பேப்பரில் கையெழுத்து போட சொல்லி உள்ளார். பின்னர் அந்த ஆசாமி கழுத்தில் தங்க சங்கிலி போட்டு இருந்தால், உதவித்தொகை தர மாட்டார்கள் என சொல்லி கழுத்தில் அணிந்து இருந்த தங்கச் சங்கிலியை கழற்றி கொடுக்க சொல்லி, வாங்கிக்கொண்டார்.

பின்னர் மாரியாயியை தாலுகா அலுவலகம் வர சொல்லி விட்டு முன்னால் சென்று உள்ளார். சிறிது நேரத்தில் அவர் மாயமாகி விட்டார். தங்கச்சங்கிலியை நூதன முறையில் பறிக்கப்பட்டதை அறிந்த மாரியாயி இது குறித்து நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com