கோவையில் நீட் தேர்வு எழுதிய 70 வயது முதியவர் - தேர்வு குறித்து பயம் வேண்டாம் என்று அறிவுரை

கோவையில் நீட் தேர்வு எழுதிய 70 வயது முதியவர், தேர்வு குறித்து மாணவர்கள் பயப்படக்கூடாது என்று கூறியுள்ளார்.
கோவையில் நீட் தேர்வு எழுதிய 70 வயது முதியவர் - தேர்வு குறித்து பயம் வேண்டாம் என்று அறிவுரை
Published on

கோவை,

கோவை விளாங்குறிச்சி சாலை விநாயகபுரத்தை சேர்ந்தவர் பிரின்ஸ் மாணிக்கம் (வயது 70). இவர் இன்று கோவையில் நடந்த நீட் தேர்வை எழுதி அசத்தி உள்ளார்.

தேர்வை எழுதிவிட்டு வெளியே வந்த அவர் கூறியதாவது,

எனக்கு செல்வம் என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். மகன்களுக்கு திருமணமாகிவிட்டது. மூத்த மகன் என்ஜினீயர், 2-வது மகன் டாக்டர். எனக்கு சிறு வயதில் இருந்தே டாக்டராக வேண்டும் என்று கனவு இருந்தது. நான் மதுரையில் கடந்த 1968-ம் ஆண்டு 11-ம் வகுப்பை முடித்தேன்.

அந்த காலத்தில் பிளஸ்-2 வகுப்பு கிடையாது. அதற்கு பதில் கல்லூரியில் பி.யு.சி. என்ற படிப்பு தான் பிளஸ்-2 ஆகும். அந்த படிப்பை படித்து விட்டு மருத்துவராக படிக்க விரும்பியபோது சீட் கிடைக்கவில்லை. இதனால் நான் விவசாய படிப்பு படித்தேன். அதன்பிறகு 2001-ம் ஆண்டு வரை வங்கியில் மேலாளராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றேன்.

பின்னர் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. துறை தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். தற்போது ஆங்கில பயிற்சி மையம் வைத்து நடத்தி வருகிறேன். நீட் தேர்வு குறித்து மாணவ-மாணவிகள் பயந்து தற்கொலை முடிவை தேடிக்கொள்கிறார்கள்.

அப்படி இந்த நீட் தேர்வில் என்ன தான் உள்ளது என்றும், நீட் தேர்வு குறித்து மாணவ-மாணவிகளுக்கு பயத்தை போக்கவே தேர்வை எழுதினேன். நீட் தேர்வு குறித்து பயம் வேண்டாம். போதிய பயிற்சி இல்லாததால் சற்று கடினமாக இருந்தது. 70 வயதில் தேர்வை எழுதியது மகிழ்ச்சி.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com