

கன்னியாகுமரி,
கன்னியாகுமரி மாவட்டம் கடுக்கரை அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 9 அடி நீளமுள்ள ராட்சத மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக பிடித்து, அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கடுக்கரை கிராமத்தின் குடியிருப்புப் பகுதிக்குள் இன்று காலை திடீரென பிரம்மாண்ட மலைப்பாம்பு ஒன்று புகுந்தது. அருகில் இருந்த ஆட்டுக்குட்டி ஒன்றை அந்த பாம்பு இரையாக விழுங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உடனே பூதப்பாண்டி வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் வனத்துறை அதிகாரிகள் மற்றும் வனக்காப்பாளர்கள் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பொதுமக்கள் உதவியுடன், ஆட்டுக்குட்டியை விழுங்கிவிட்டு நகர முடியாமல் இருந்த 9 அடி நீள மலைப்பாம்பை சாதுரியமாகப் பிடித்தனர்.
பிடிக்கப்பட்ட மலைப்பாம்பு எவ்வித காயமுமின்றி பத்திரமாக சாக்குப்பையில் அடைக்கப்பட்டு, கீரிப்பாறை பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, அந்த மலைப்பாம்பு பாதுகாப்பாக காட்டில் விடுவிக்கப்பட்டது. வனத்துறையினரின் இந்த விரைவான நடவடிக்கைக்கு அப்பகுதி பொதுமக்கள் தங்களது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்தனர்.