

திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 40). இவர் முருக்கம்பட்டு கிராமத்தில் குத்தகை நிலத்தில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். பண்ணையில் கோழி மற்றும் ஆடுகளை பராமரிக்க ஆட்கள் தேவைப்படுவதாக அவர் தனது நண்பர் வினோத்திடம் (20) தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, வினோத் தனது பெரியம்மா வெண்ணிலா (38) மற்றும் அவரது குடும்பத்தினரை அங்கு வேலைக்கு சேர்த்துள்ளார். கணவரை இழந்த வெண்ணிலா, தனது மகன்கள் சுரேஷ் (15), சூர்யா (7), தேவா (4) ஆகியோருடன் கடந்த 6 மாதங்களாக கோழிப்பண்ணையில் தங்கி வேலை செய்து வந்தார். வெண்ணிலாவுக்கு உதவியாக மகன் சுரேஷ் ஆடுகளை மேய்ப்பது, கோழிகளை பராமரிப்பது போன்ற வேலைகளை செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது மகன் சுரேஷை, பாலமுருகன், வினோத் உள்ளிட்டோர் சேர்ந்து அடித்து கொலை செய்து கோழி பண்ணை வளாகத்திலேயே புதைத்துவிட்டதாக வெண்ணிலா கண்ணீர் மல்க திருத்தணி போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. அவை வருமாறு:-
கடந்த பிப்ரவரி மாத இறுதியில் கோழி பண்ணைக்கு குடும்பத்துடன் சென்ற பாலமுருகன் மற்றும் வினோத் பண்ணையில் கோழிகள் குறைந்ததற்கும், பக்கத்து நிலத்தில் ஆடுகள் மேய்ந்ததால் ஏற்பட்ட தகராறுக்கும் சிறுவன் சுரேஷ் தான் காரணம் என கூறி அவரை சரமரியாக தாக்கியுள்ளனர். இந்த கொடூர தாக்குதலில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர் சிறுவனின் உடலை பண்ணை வளாகத்திலேயே பள்ளம் தோண்டி புதைத்தனர். சுரேஷ் உயிரிழந்தது குறித்து வெளியில் சொல்லக்கூடாது. மீறி சொன்னால் உன்னையும், மற்ற மகன்களையும் கொலை செய்து விடுவோம் என வெண்ணிலாவை, பாலமுருகன் மற்றும் வினோத் இருவரும் மிரட்டியுள்ளனர். மேலும் வெண்ணிலா மற்றும் அவரது மகன்களை கோழி பண்ணையிலேயே கடந்த 4 மாதங்களாக சிறைபிடித்து வைத்துள்ளனர்.
இதனையடுத்து திருத்தணி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஷுபம் திமான் தலைமையிலான போலீசார் கடம்பத்தூர் பகுதியில் தலைமறைவாக இருந்த பாலமுருகன், அவரது மனைவி புவனேஸ்வரி, வினோத் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து நேற்று முருக்கம்பட்டு கோழி பண்ணையில் கொலை செய்து புதைக்கப்பட்ட சுரேஷின் உடலை திருவள்ளூர் மாவட்ட குற்றவியல் தலைமை நீதிபதி நளினி தேவி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்த சுக்லா, மாவட்ட பயிற்சி கலெக்டர் பவித்ரா, வருவாய் ஆர்.டி.ஓ. கனிமொழி ஆகியோர் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது.
பின்னர் மாவட்ட மருத்துவ கல்லூரி டாக்டர்கள் மூலம் பிரேத பரிசோதனை நடைபெற்றது. மேலும் சம்பவ இடத்தில் மாவட்ட தடயவியல் உதவி இயக்குனர் மோகன் தலைமையில் ஊழியர்கள் தடயங்களை சேகரித்தனர். பிரேத பரிசோதனை முடிந்து தாய் வெண்ணிலாவிடம் சுரேஷின் உடல் ஒப்படைக்கப்பட்டது. கோழிப்பண்ணையில் சிறுவன் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.