ஈட்டி தலையில் பாய்ந்ததில் மூளைச்சாவு அடைந்த சிறுவன் உயிரிழப்பு

பயிற்சியின்போது சக மாணவர் வீசிய ஈட்டி தலையில் பாய்ந்ததில் காயமடைந்த பள்ளி மாணவனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.
ஈட்டி தலையில் பாய்ந்ததில் மூளைச்சாவு அடைந்த சிறுவன் உயிரிழப்பு
Published on

கடலூர்,

கடலூர் மாவட்டம் வடலூர் பார்வதிபுரம் தருமச்சாலை பகுதியை சேர்ந்தவர் திருமுருகன் (வயது 35). நெய்வேலியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சிவகாமி. இந்த தம்பதியின் மகன் கிஷோர்(15). இவன் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட கிஷோர், மாவட்ட மற்றும் மாநில அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளான்.

இந்தநிலையில் கடந்த 24-ம் தேதி பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கான விளையாட்டு பயிற்சி நடந்தது. அப்போது ஒரு மாணவன் ஈட்டி எறியும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தான். அவன் வீசிய ஈட்டி எதிர்பாராதவிதமாக அங்கு நின்று கொண்டிருந்த கிஷோரின் தலையில் பாய்ந்து, ரத்தம் பீறிட்டு வெளியேறியது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக கிஷோரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கிஷோர் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த தாய் சிவகாமி கதறி அழுதார். மனமுடைந்த நிலையில் இருந்த அவர், தற்கொலை முயற்சியாக நேற்று காலை வீட்டில் இருந்த பிளீச்சிங் பவுடரை தின்றார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிவகாமிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். தற்போது அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளார்.

இந்நிலையில் ஈட்டி தலையில் பாய்ந்ததில் மூளைச்சாவு அடைந்த சிறுவன் இன்று முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

பாதுகாப்பு இல்லாமல் பள்ளியில் ஈட்டி பயிற்சி அளித்தபோது மாணவர் கிஷோர் படுகாயமடைந்து மரணம் அடைந்தது தொடர்பாக; பள்ளி தாளாளர் பிரவீன், ஆசிரியர்கள் பிரவீன் குமார், சரவணன், விநாயக மூர்த்தி ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com