மாமல்லபுரத்தில் கடலில் அடித்துச் செல்லப்பட்டதாக நினைத்த சிறுவன் உயிருடன் மீட்பு; பெற்றோர் ஆனந்த கண்ணீர்

மாமல்லபுரத்தில் கடலில் அடித்துச் செல்லப்பட்டதாக நினைத்த சிறுவன் உயிருடன் மீட்டு ஒப்படைத்ததால் அவனது பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர்.
மாமல்லபுரத்தில் கடலில் அடித்துச் செல்லப்பட்டதாக நினைத்த சிறுவன் உயிருடன் மீட்பு; பெற்றோர் ஆனந்த கண்ணீர்
Published on

கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டம் விஜிலாபுரம் நகரை சேர்ந்தவர் சோம்சேகர். இவர் தன்னுடைய மனைவி, 4 வயது மகன் சரண் ஆகியோருடன் மாமல்லபுரம் சுற்றுலா வந்திருந்தார். குடும்பத்துடன் புராதன சின்னங்களை பார்த்து ரசித்துவிட்டு, இறுதியாக கடற்கரைக்கு சென்றார்.

அங்கு சோம்சேகர், மனைவி, மகனுடன் கடல் அலையில் நின்று கால்களை நனைத்து கொண்டு, கடல் அலையின் அழகை ரசித்து கொண்டிருந்தார். கடல் அலையின் சீற்றம் கரைப்பகுதியை நோக்கி முன்னோக்கி வந்த வேகத்தில் பலர் தலை தெறிக்க நாலாபுறமும் சிதறி ஓடினர்.

இதில் சிறுவன் சரண் திடீரென மாயமானான். இதனால் அதிர்ச்சி அடைந்த சோம்சேகர், அந்த பகுதியில் 2 மணி நேரமாக தேடியும் அவன் கிடைக்கவில்லை. எனவே தனது மகன் கடல் அலையில் அடித்து செல்லப்பட்டு இருப்பானா என பதறினார். இதுபற்றி மாமல்லபுரம் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் கடற்கரை பகுதி முழுவதும் சிறுவனை தேடி ரோந்து வந்தனர். அப்போது கடற்கரை கோவிலின் தெற்கு பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டத்தில் மாயமான சோம்சேகரின் மகன் சரண் அழுதபடி நிற்பதை கண்டனர். சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். கடலில் அடித்து செல்லப்பட்டதாக நினைத்த தங்கள் மகனை போலீசார் உயிருடன் மீட்டு ஒப்படைத்ததால் அவனது பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர். பின்னர் போலீசாருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துவிட்டு சோம்சேகர் தனது மனைவி, மகனுடன் கர்நாடகா திரும்பிச்சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com