

திருப்பூர்,
தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கூட்டணி பேச்சுவார்த்தைகள் மற்றும் தேர்தல் பரப்புரையில் தமிழக அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. அதிமுக சார்பில் வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற பெயரில் முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் காங்கேயம் இன காளைக்கு பெருமை சேர்க்கும் வகையில் காங்கேயத்தில் வெண்கல சிலை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் தனது தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய முதலமைச்சர் பழனிசாமி, நான் ஒரு விவசாயி. அதனால் விவசாயக் கடனை தள்ளுபடி செய்திருக்கிறேன். வறட்சியாலும் புயலாலும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வாழ்வாதாரத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்பதற்காக கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர்க்கடன் ரத்து செய்யப்படும் என சட்டமன்றத்திலேயே அறிவித்திருக்கிறேன். சட்டப்பேரவையில் அறிவித்தபடி விவசாய பயிர்க்கடனை தள்ளுபடி செய்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகள் இந்த திட்டத்தால் பயன்பெற்றுள்ளனர். இதற்காக 12 ஆயிரத்துக்கு 110 கோடி தள்ளுபடி செய்திருக்கிறோம்.
வீடு இல்லாதவர்களுக்கு, வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் 2.5 லட்சம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். காங்கேயம் இன காளைக்கு பெருமை சேர்க்கும் வகையில் காங்கேயத்தில் வெண்கல சிலை அமைக்கப்படும்.
ஒரு நாடு சிறக்க கல்வியில் முன்னேற்றம் இருக்க வேண்டும். கல்வியில் சிறந்து இருக்கும் மாநிலத்தில் எல்லா வளமும் தானாக வந்து சேரும். பிற துறைகளை காட்டிலும் கல்வித்துறைக்கே அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் தான் அதிக அளவில் கலைக் கல்லூரிகள் அமைக்கப்பட்டது. ஏழை மாணவர்களுக்கு உயர்கல்வி படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளோம் என்று அவர் கூறினார்.