விவசாயி வீட்டின் மேற்கூரையை துளைத்த துப்பாக்கி குண்டு

பெரம்பலூர் அருகே விவசாயி வீட்டின் மேற்கூரையை துப்பாக்கி குண்டு துளைத்தது.
விவசாயி வீட்டின் மேற்கூரையை துளைத்த துப்பாக்கி குண்டு
Published on

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலம் ஈச்சங்காடு கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி(வயது 60). விவசாயி. இவரது மனைவி ராஜாமணி(56). இவர்களது மகன் பாரதிதாசன்(32). இவர் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மோகனப்பிரியா(27) என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இவர்கள் அனைவரும் அப்பகுதியில் உள்ள ஆஸ்பெட்டாஸ் ஷீட் கூரையுடன் கூடிய வீட்டில் வசித்து வருகின்றனர்.

சுப்பிரமணி வீட்டின் பின்புறம் சிறிது தூரத்தில் மலைப்பகுதி உள்ளது. அங்கு அரசு சார்பில் துப்பாக்கி சுடும் தளம் செயல்படுகிறது.

திடீரென கேட்ட சத்தம்

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை சுப்பிரமணி, ராஜாமணி ஆகியோர் வயலுக்கும், பாரதிதாசன் வேலைக்கும் சென்று விட்டனர். வீட்டில் மோகனப்பிரியா மட்டும் தனது குழந்தையுடன் இருந்துள்ளார். அப்போது வீட்டின் கூரைப்பகுதியில் இருந்து திடீரென ஏதோ சத்தம் கேட்டுள்ளது. எதனால் சத்தம் ஏற்பட்டது என்பது பற்றி மோகனப்பிரியாவுக்கு தெரியவில்லை.

மேற்கூரையில் கிடந்த துப்பாக்கி குண்டு

இந்த நிலையில், நேற்று காலை சுப்பிரமணி வீட்டின் கூரைப்பகுதியில் துளை ஏற்பட்டிருந்ததையும், அதில் இருந்து வெளிச்சம் வீட்டிற்குள் ஊடுருவியதையும் கண்டார். இதுபற்றி பாரதிதாசனிடம் தெரிவித்த அவர், கூரைப்பகுதியில் ஏறி பார்க்குமாறு தெரிவித்துள்ளார்.

அதன்படி பாரதிதாசன் வீட்டு சுவற்றில் சாற்றப்பட்டிருந்த ஏணி மூலம் ஏறி, மேற்கூரையில் பார்த்தபோது, அங்கு ஒரு துப்பாக்கி குண்டு கிடந்தது. அதனை எடுத்து வந்த அவர் சுப்பிரமணியிடம் காண்பித்துள்ளார். இதுபற்றி அவர்கள் உடனடியாக வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர்.

போலீசார் விசாரணை

மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி மற்றும் போலீசார் அந்த வீட்டிற்கு வந்து துளை ஏற்பட்டிருந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், அருகில் மலைப்பகுதியில் உள்ள துப்பாக்கி சுடும் தளத்தில் இருந்து வந்த துப்பாக்கி குண்டு சுப்பிரமணியின் வீட்டு கூரையை துளைத்திருக்கலாம், என்பது தெரியவந்தது.

மேலும், சுப்பிரமணி வீட்டின் மேற்கூரையில் பாய்ந்த துப்பாக்கி குண்டு ரெயில்வே பாதுகாப்பு படையினர் பயிற்சிக்கு பயன்படுத்தியதாக இருக்கலாம் என்றும், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், மேலும் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் துப்பாக்கி சுடும் தளத்தில் இருந்து வந்த துப்பாக்கி குண்டு பாய்ந்து புகழேந்தி என்ற சிறுவன் உயிரிழந்த நிலையில், விவசாயி வீட்டின் மேற்கூரையை துப்பாக்கி குண்டு துளைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com