கூண்டு வெச்சது புலிக்கு ஆனால் சிக்கியது சிறுத்தை..! வனத்துறையினர் விடுத்த எச்சரிக்கை

2 பேரை கொன்ற புலியை பிடிக்க வனத்துறை வைத்த கூண்டில் சிறுத்தை ஒன்று சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கூண்டு வெச்சது புலிக்கு ஆனால் சிக்கியது சிறுத்தை..! வனத்துறையினர் விடுத்த எச்சரிக்கை
Published on

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த லாரஸ்டன் பகுதியில் தொழிலாளி, விவசாயி ஆகிய 2 பேரை அடுத்தடுத்து புலி கடித்து கொன்றது. இதனால் லாரஸ்டன் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்கள் பீதியிலும், அச்சத்துடனும் வாழ்ந்து வருகின்றனர்.

போக்கு காட்டும் புலி

மனிதர்களை வேட்டையாடும் அந்த புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து வன ஊழியர்கள், கால்நடை மருத்துவர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் களமிறக்கப்பட்டு புலியை தேடும் பணி தீவிரமாக நடை பெற்று வருகிறது. நேற்று 19-வது நாளாக புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க காடுகளுக்குள் பொருத்தப்பட்டு இருந்த தானியங்கி கேமராக்களில் வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.

அதில் புலியின் உருவம் பதிவாகவில்லை. மேலும் நவீன டிரோன் மூலம் வான்வழியாக புலி பதுங்கியிருக்கும் இடத்தை கண்டறியும் முயற்சி முடுக்கி விடப்பட்டுள்ளது. அடர்ந்த புதர்கள் நிறைந்த பகுதிகளில் கூண்டுகள் வைக்கப்பட்டும், புலி சிக்காமல் போக்கு காட்டி வருகிறது.

குடியிருப்புகளில் ரோந்து

இதைத்தொடர்ந்து லாரஸ்டன் அரசு பள்ளிக்கூடம், பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். மேலும் குடியிருப்பு பகுதிக்குள் புலி நுழையலாம் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக லாரஸ்டன் பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடம், குடியிருப்பு பகுதிகளில் வனத்துறையினர் ஆயுதங்களுடன் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தனியாக செல்ல வேண்டாம் என்றும், மாலை நேரங்களில் தேவை இன்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் வனத்துறையினர் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதனிடையே புலியை விரைந்து பிடிக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.

சிக்கிய சிறுத்தை

இந்நிலையில் கூடலூர் ஓவேலி பகுதியில் 2 பேரை கொன்ற புலியை பிடிக்க வனத்துறை வைத்த கூண்டில் சிறுத்தை ஒன்று சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. 13 இடங்களில் கூண்டு வைத்து 20-வது நாளாக புலியை தேடி வரும் வனத்துறையினர் கூண்டில் சிக்கிய சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்தனர். புலியை பிடிக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com