அரசு பணிகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகாம்

காஞ்சீபுரத்தில் அரசு பணிகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முகாம் நடைபெற்றது.
அரசு பணிகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகாம்
Published on

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அரசு துறைகள் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள முகாமை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், காஞ்சீபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், காஞ்சீபுரம் தொகுதி எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் தொடங்கி வைத்து பல்வேறு அரசு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்கை பார்வையிட்டனர்.

முகாமில் ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, வனத்துறை, கூட்டுறவுத்துறை, கால்நடை பராமரிப்பு துறை, மகளிர் திட்டம், மாவட்ட தொழில் மையம் மற்றும் வேளாண்மை துறைகளின் மூலம் அரங்குகள் அமைக்கப்பட்டு துறை சார்ந்த அலுவலர்கள் பொதுமக்களுக்கு துறையின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தனர்.

தோட்டக்கலை துறை சார்பில் டிரோன் மூலம் பயிர்களுக்கு மருந்து தெளிக்கும் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு, செயல்படுத்தி காட்டப்பட்டது.

மகளிர் திட்டம் சார்பில் சிறுதானியம் மற்றும் உணவு முறைகள் காட்சியமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு சிறுதானியத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. வனத்துறை சார்பில் மரங்களால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விளக்கம் அளித்தனர். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அவர்களுக்கு தேவைப்படும் நலத்திட்டங்களை சம்பந்தப்பட்ட துறையின் முகாமில் அலுவலர்களை சந்தித்து தங்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொண்டார்.

இந்த முகாமில் காஞ்சீபுரம் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சா.செல்வகுமார், காஞ்சீபுரம் ஒன்றிய குழுத்தலைவர் மலர்க்கொடி குமார், காஞ்சீபுரம் ஒன்றிய குழு துணைத்தலைவர் திவ்வியப்பிரியா இளமது, வட்டார வளர்ச்சி அலுவலர், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com