விழுப்புரம் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து ரூ.1 லட்சம் முட்டைகள் சேதம்

அவ்வழியாக சென்ற பொதுமக்கள், அதில் சிறிதளவு உடைந்த முட்டைகளை மட்டும் போட்டிபோட்டு அள்ளிச்சென்றனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே உள்ள கெடாரை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 40). இவர் நாமக்கல்லில் இருந்து முட்டைகளை மொத்தமாக கொள்முதல் செய்து விழுப்புரத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் நாமக்கல்லில் இருந்து முட்டைகளை மொத்தமாக கொள்முதல் செய்தார்.
பின்னர் அதனை தனக்கு சொந்தமான சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து நேற்று விழுப்புரம் புறப்பட்டார். சரக்கு வாகனத்தை விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தை சேர்ந்த ரமேஷ் (35) என்பவர் ஓட்டினார்.
விழுப்புரம் அருகே அயினம்பாளையம் என்ற இடத்தில் நேற்று காலை 8.30 மணியளவில் சென்றுகொண்டிருந்தபோது முன்னால் சென்றுகொண்டிருந்த அரசு பஸ்சை, ராமேஷ் முந்திச்செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது, அவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் திடீரென நிலைதடுமாறி நடுரோட்டிலேயே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சரக்கு வாகனத்தில் இருந்த குணசேகரன், டிரைவர் ரமேஷ் ஆகிய இருவரும் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
மேலும் சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் அதிலிருந்த முட்டைகளில் சுமார் 20 ஆயிரம் முட்டைகள் உடைந்து சேதமானது. இதன் சேத மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. சாலையில் முட்டைகள் உடைந்து கிடப்பதை பார்த்ததும் அவ்வழியாக சென்ற பொதுமக்கள், அதில் சிறிதளவு உடைந்த முட்டைகளை மட்டும் போட்டிபோட்டு அள்ளிச்சென்றனர். உடையாத முட்டைகள் மாற்று வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விபத்து காரணமாக விழுப்புரம்-செஞ்சி சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் அங்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான சரக்கு வாகனத்தை சாலையோரமாக அப்புறப்படுத்தினர். அதன் பிறகு போக்குவரத்து சீரானது.






