தற்கொலைக்கு தூண்டியதாக பேராசிரியர் உள்பட 3 பேர் மீது வழக்கு

குமரி மாவட்டத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் கல்லூரி பேராசிரியர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்த பெண் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்கொலைக்கு தூண்டியதாக பேராசிரியர் உள்பட 3 பேர் மீது வழக்கு
Published on

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் கல்லூரி பேராசிரியர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்த பெண் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவ மாணவி தற்கொலை

தூத்துக்குடி வி.டி.சி. நகரைச் சேர்ந்தவர் சிவகுமார், வியாபாரி. இவருடைய மகள் சுகிர்தா (வயது 27). இவர் சென்னையில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்தார். பின்னர் குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் முதுநிலை 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 6-ந் தேதி மாணவி சுகிர்தா கல்லூரி விடுதி அறையில் உடல் தசைகளை தளர்வடையச் செய்யும் ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக குலசேகரம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாணவி எழுதியதாக கூறப்படும் ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் பேராசிரியர் பரமசிவம், முதுகலை 3-ம் ஆண்டு மாணவர்களான டாக்டர்கள் ஹரீஸ், பிரீத்தி ஆகியோர் உடல் மற்றும் மன ரீதியில் துன்புறுத்தியதாக எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

3 பேர் மீது வழக்கு

இதையடுத்து கடிதத்தில் குறிப்பிட்டுள்ள பேராசிரியர் உள்பட 3 பேரும் மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக இந்திய குற்றவியல் சட்டம் 306 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக தக்கலை துணைபோலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன், குலசேகரம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜானகி மற்றும் போலீசார் பிற மாணவ-மாணவிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் குமரி மாவட்ட போலீஸ் முகநூல் பக்கத்தில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் 'தனியார் மருத்துவக் கல்லூரியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் உரிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெண் அதிகாரி நியமனம்

இதுதொடர்பாக விசாரணை நடத்தவும், உண்மைகளை கண்டறியவும் ஒரு பெண் அதிகாரி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தகவல்களை யாரேனும் பகிர்ந்து கொள்ள விரும்பினால் 94981 95077 என்ற சல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்' என்று கூறப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com