பேனா சின்னம் அமைக்க தடை கோரிய வழக்கு - பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

மெரினாவில் கருணாநிதி நினைவிடம் அருகே கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைக்க மத்திய அரசு முதல் கட்ட அனுமதி அளித்துள்ளது.
பேனா சின்னம் அமைக்க தடை கோரிய வழக்கு - பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!
Published on

சென்னை,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் இலக்கிய பணிகளை போற்றும் வகையில் சென்னை மெரினாவில் அமைந்துள்ள அவரது நினைவிடத்திற்கு அருகே கடலில் தமிழக அரசு சார்பில் ரூ.80 கோடி செலவில் பேனா வடிவில் நினைவுச்சின்னம் அமைக்கப்பட உள்ளது.

இந்த பிரம்மாண்ட கட்டுமானத்துக்கு 'முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம்' என்று பெயரிடப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துவிட்டது. இதையடுத்து மெரினாவில் கருணாநிதி நினைவிடம் அருகே கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைக்க மத்திய அரசு முதல் கட்ட அனுமதி அளித்துள்ளது.

இதனையடுத்து சென்னை, மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக 42 மீட்டர் உயர பேனா நினைவுச்சின்னம் அமைக்க தடை கோரி வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், சென்னை நேப்பியர் பாலம் முதல் கோவளம் வரையிலான கடலோர பகுதிகள் ஆமைகள் முட்டையிட்டு இனப்பெருக்கும் செய்யும் பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டுமானங்கள் மேற்கொள்வதால் ஆமைகளின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுவதுடன், கடல் வளமும் பாதிக்கப்படும் என்றும், கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின் படி, நிபுணர் குழுவை அமைத்து விதிகளுக்கு மாறாக கட்டுப்பட்டுள்ள அனைத்து கட்டுமானங்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவாக பேனா நினைவுச்சின்னம் அமைக்க தடைக்கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் சென்னை மாநகராட்சி பதிலளிக்க தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com