

ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் உள்ள பிடாரி அம்மன் கோவில் திருவிழா வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், கருவறைக்குள் நல்ல பாம்பு புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் பிடாரி அம்மன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலின் திருவிழா பெரும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து இன்று (வியாழக்கிழமை) அம்மனுக்கு பூஜைகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றன. அப்போது, யாரும் எதிர்பாராத விதமாக சுமார் 5 அடி நீளமுள்ள விஷம் கொண்ட நல்ல பாம்பு ஒன்று திடீரென கோவிலின் கருவறைக்குள் புகுந்தது.
கருவறையின் உள்ளே பாம்பின் நடமாட்டத்தைக் கண்ட கோவில் பூசாரி கடும் அதிர்ச்சியடைந்தார். பதற்றமடைந்த அவர், உடனடியாக கருவறையை விட்டு வெளியேறி பக்தர்களுக்கும் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்தார். இதனால் அங்கிருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பதறியடித்துக் கொண்டு நாலாபுறமும் ஓடினர்.
இச்சம்பவம் குறித்து திருவாடானை தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கருவறைக்குள் பதுங்கியிருந்த பாம்பை நீண்ட நேரம் போராடி லாவகமாகப் பிடித்தனர்.
எவ்வித காயமுமின்றி பத்திரமாக மீட்கப்பட்ட அந்த நல்ல பாம்பு, பின்னர் அருகில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்களின் இந்த விரைவான செயலால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டு, கோவில் பகுதியில் அமைதி நிலை திரும்பியது. இந்த சம்பவத்தால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.