பள்ளிப்பட்டு அருகே பலத்த காற்று வீசியதில் தென்னை மரம் முறிந்து விழுந்து கட்டிட மேஸ்திரி பலி

பள்ளிப்பட்டு அருகே தென்னை மரம் முறிந்து கட்டிட மேஸ்திரி மீது விழுந்தது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பள்ளிப்பட்டு அருகே பலத்த காற்று வீசியதில் தென்னை மரம் முறிந்து விழுந்து கட்டிட மேஸ்திரி பலி
Published on

கட்டிட மேஸ்திரி

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் நேற்று பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதில் பள்ளிப்பட்டு அருகே திருமல ராஜுப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பைய்யா (வயது 70). கட்டிட மேஸ்திரி வேலை செய்து வந்தார். அந்த கிராமத்தில் கங்கை அம்மன் கோவில் புதிதாக கட்டி அந்த கோவிலின் கும்பாபிஷேகம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதற்காக கோவில் அருகே யாகசாலை ஏற்பாடு செய்து அதில் கலச பூஜைகள் நடைபெற்றன. அப்போது பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. குப்பைய்யா மேஸ்திரி கோவிலுக்கு சென்று அங்கு வழங்கிய உணவைப் பெற்றுக் கொண்டு வீட்டிற்கு திரும்பி செல்லும் பொழுது கோவிலின் பின்புறம் இருந்த தென்னை மரம் பலத்த காற்றில் முறிந்து இவர் மீது விழுந்தது.

பலி

இதில் படுகாயம் அடைந்த குப்பைய்யாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு அவரை சிகிச்சைக்காக கோனேட்டம் பேட்டையில் உள்ள பள்ளிப்பட்டு தாலுகா அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் குப்பைய்யா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இவருக்கு கிருஷ்ணவேணி (60) என்ற மனைவியும், டில்லி பாபு (45), விஜயகுமார் (42) என்ற 2 மகன்களும், நோமேஸ்வரி (38) என்ற மகளும் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து பள்ளிப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

இதைபோல் பேரம்பாக்கம் அருகே உள்ள இருளஞ்சேரியை சேர்ந்தவர் ஏழுமலை (58). இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்டு வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். கடந்த 17-ந் தேதியன்று ஏழுமலை தன் வீட்டின் அருகே சென்றபோது சேற்றில் வழுக்கி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. உடனே அவரது வீட்டில் உள்ளவர்கள் அவரை சிகிச்சைக்காக பேரம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த ஏழுமலை நேற்று முன்தினம் சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிழந்தார். இது குறித்து மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com