

சென்னை,
சென்னை மணலியில் உள்ள தேசியநகரை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவர் மஞ்சம்பாக்கத்தில் உள்ள சுங்கச்சாவடியில் வாட்ச்மேனாக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று வழக்கம்போல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
அப்போது மணலி புதுநகரில் இருந்து கண்டெய்னர் லாரி ஒன்று வந்தது. அந்த லாரி தவறான பாதையில் வந்துள்ளது. இதனை கண்ட ஜெயபிரகாஷ் அதனை தடுத்து நிறுத்த முயன்றார். இதனைக் கண்ட டிரைவர் லாரியை வேகமாக திருப்ப முயன்றார். அப்போது ஜெயபிரகாஷ் லாரியின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
மேலும் விபத்து ஏற்படுத்திய லாரி நிற்காமல் சென்றது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை அறிந்து அங்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
பின்னர் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து நிற்காமல் சென்ற லாரியை விரட்டி சென்று மடக்கி பிடித்து டிரைவரை கைது செய்தனர். அவரை விசாரணை செய்ததில் குடிபோதையில் இருப்பது தெரியவந்தது. மேலும் இச்சம்பவத்திற்கு முன்னர் சாலையில் சென்ற ஒருவர் மீது மோதியுள்ளார். அவர்கள் துரத்தி வந்ததால் மாற்று பாதையில் செல்ல முயன்றுள்ளார். அப்போதுதான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.