நாகர்கோவிலில் பழுதாகி நடுவழியில் நின்ற கன்டெய்னர் லாரி; 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

நாகர்கோவில்-நெல்லை சாலையில் பழுதாகி நின்ற கன்டெய்னர் லாரியால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.
நாகர்கோவிலில் பழுதாகி நடுவழியில் நின்ற கன்டெய்னர் லாரி; 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
Published on

நாகர்கோவில்,

நாகர்கோவில்-நெல்லை சாலையில் பழுதாகி நின்ற கன்டெய்னர் லாரியால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

போக்குவரத்து பாதிப்பு

நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு செல்லும் சாலையில் நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள பாலம் முக்கிய நுழைவு வாயிலாக இருந்து வருகிறது. இந்த பாலம் குறுகலான பாலமாக இருக்கிறது. இதனால் ஏதாவது ஒரு வாகனம் பழுதாகி நடுவழியில் நின்றால் மணிக்கணக்கில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதும், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.

இதேபோல நேற்று காலை 6 மணி அளவில் நாகர்கோவில் ஒழுகினசேரி பாலம் வழியாக வந்த கன்டெய்னர் லாரி சாலையின் நடுவே திடீரென பழுதாகி நின்றது. இதனால் நாகர்கோவில்- நெல்லை சாலையில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. நாகர்கோவிலில் இருந்து நெல்லை சென்ற வாகனங்கள் ஒழுகினசேரி பாலத்தில் இருந்து வடசேரி வரையிலும், நெல்லையில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த வாகனங்கள் ஒழுகினசேரி பாலத்தில் இருந்து அப்டா மார்க்கெட் வரையிலும் அணிவகுத்து நின்றன. இதனால் வாகனங்கள் அங்குமிங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

கடும் அவதி

இதுபற்றிய தகவல் அறிந்த நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே நாகர்கோவிலில் இருந்து நெல்லை செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. அதே சமயத்தில் சாலையில் பழுதாகி நின்ற கன்டெய்னர் லாரியை சாலையில் இருந்து அப்புறப்படுத்தும் பணி நடந்தது. சுமார் அரை மணி நேர போராட்டத்துக்குப்பிறகு அந்த லாரி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. அதன்பிறகே போக்குவரத்து சீரானது. காலை 6 மணிக்கு ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பு 8 மணிக்கு பிறகு தான் சீரானது. இதனால் 2 மணி நேரம் பஸ்களில் பயணம் செய்த பயணிகளும், பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

ஒழுகினசேரி பாலத்தின் அருகில் இரட்டை ரெயில் பாதைக்காக புதிய பாலம் அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த பாலப்பணிகள் முடிவடைந்தால் இதுபோன்ற போக்குவரத்து பாதிப்பு ஏற்படாது என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com