தாம்பரம் சானிடோரியம் ரெயில் நிலையத்தில் 3 வயது குழந்தையை தவிக்கவிட்ட கொடூரன்

என்ன செய்வதென்று தெரியாமல் ரெயில் நிலையத்தில் பரிதவித்த குழந்தை மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் சானிடோரியம் ரெயில் நிலையத்தில் 3 வயது குழந்தையை தவிக்கவிட்ட கொடூரன்
Published on

பரங்கிமலை,

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரெயில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் தாம்பரம் சானடோரியம் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அப்போது ரெயில் பெட்டியில் இருந்த  ஒரு கொடூரன், ரெயில் புறப்பட இருந்த நேரத்தில் சுமார் 3 வயது ஆண் குழந்தையை ரெயிலில் இருந்து கீழே இறக்கிவிட்டு சென்றுள்ளான்.

சானடோரியம் ரெயில் நிலையத்தில் அந்த குழந்தை சுற்றிக்கொண்டு இருந்தது. ரோந்து பணியில் இருந்த பரங்கிமலை ரெயில்வே பாதுகப்பு போலீசார் ஆதரவின்றி தவித்த குழந்தையை மீட்டு பரங்கிமலை அழைத்து வந்தனர். அந்த குழந்தை யாருடையது? என்ற விவரங்கள் தெரியாததால் ஆலந்தூரில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

சானடோரியம் ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது வாலிபர் ஒருவர் அந்த குழந்தையை ரெயிலில் இருந்து கீழே இறக்கிவிட்டு செல்லும் காட்சி மிக தெளிவாக பதிவாகி இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த குழந்தை யார்? அவர் எதற்காக இறக்கி விட்டார்? குழந்தையை கடத்தி வந்தாரா? என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com