சாலையோரத்தில் ஆபத்தான குழி

கொளப்பள்ளி-அய்யன்கொல்லி இடையே சாலையோரத்தில் உள்ள ஆபத்தான குழியை உடனடியாக மூட பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
சாலையோரத்தில் ஆபத்தான குழி
Published on

கொளப்பள்ளி-அய்யன்கொல்லி இடையே சாலையோரத்தில் உள்ள ஆபத்தான குழியை உடனடியாக மூட பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இணைப்பு சாலை

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கொளப்பள்ளியில் இருந்து பேக்டரி மட்டம் வழியாக அய்யன்கொல்லிக்கு தார்சாலை செல்கிறது. இந்த சாலையானது, கேரளாவுக்கு செல்லும் இணைப்பு சாலையாகவும் விளங்குகிறது.

இதை கருத்தில் கொண்டு கூடலூரில் இருந்து தமிழக அரசு பஸ்களும், சுல்தான்பத்தேரியில் இருந்து கேரள அரசு பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த பஸ்களை கொளப்பள்ளி, பேக்டரிமட்டம், குறிஞ்சிநகர், மழவன்சேரம்பாடி, கோட்டப்பாடி, அய்யன்கொல்லி, நம்பியார்குன்னு பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் பச்சை தேயிலையை ஏற்றி செல்லும் சரக்கு வாகனங்கள் உள்பட தனியார் வாகனங்களும் அதிகளவில் இயக்கப்படுகின்றன.

மண் அரிப்பு

இந்த நிலையில் கொளப்பள்ளி-அய்யன்கொல்லி சாலையோரத்தில் பேக்டரிமட்டம் பகுதியில் தனியார் தேயிலை தொழிற்சாலை அருகில் ஆபத்தான வகையில் குழி ஒன்று ஏற்பட்டு உள்ளது.

இந்த குழி தொடர் மழையால் மண் அரிப்பு ஏற்பட்டு ஆழமாகி கொண்டே செல்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் குழிக்குள் இறங்கி விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது.

குறிப்பாக இரவு நேரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள், அதுபோன்ற விபத்துகளில் சிக்கி வருகின்றனர். மேலும் அந்த வழியாக நடந்து செல்லும் சிறுவர்கள் உள்பட பொதுமக்களும் தவறி விழுந்து காயம் அடைகின்றனர்.

எனவே அந்த குழியை உடனடியாக மூட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com