

அலங்காநல்லூர்,
மதுரை அருகே பொதும்பு வானவில் நகரை சேர்ந்தவர் சதீஷ் (வயது 37). வெளிநாட்டில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில், வீடு பூட்டப்பட்டிருந்தது. இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 80 பவுன் தங்க நகைகள், ரூ.5 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள், செல்போன்கள் மற்றும் பிற பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
வீட்டிற்கு திரும்பிய குடும்பத்தினர், வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மதுரை மாவட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) ஸ்ரீநாதன், சமயநல்லூர் துணை சூப்பிரண்டு ஆனந்தராஜ் மற்றும் அலங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
மேலும், கைவரிசை காட்டிய கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.