

திருச்சி,
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று தனது 3-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் தனியார் ஓட்டலில் நடந்த சிறு, குறு தொழிலதிபர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் ஏற்பாடு செய்து இருந்த கூட்டத்தில் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.
பின்னர் சிந்தாமணி அண்ணா சிலை அருகே பேசிய அவர், தமிழகத்தில் புதிய ஊழலற்ற ஆட்சியை உருவாக்க முடியும் என்று நீங்களும் நம்புவது, எனக்கு புரிகிறது. சில கூட்டங்களில், அமைச்சர்களே முன்னின்று ரூபாய் நோட்டுக்களை எண்ணிக் கொடுத்து கூட்டம் சேர்க்கின்றனர். ஆனால், இது நேர்மையாக சேரும் கூட்டம் என்று மேளம் கொட்டி, மார்தட்டி சொல்லிக் கொள்ளலாம். சினிமா நட்சத்திரம் வந்தால், கூட்டம் கூடும் என்று சிலர் பேசுகின்றனர். நான் இனிமேல், சினிமா நட்சத்திரம் அல்ல, உங்கள் வீட்டில் வைத்துக் கொள்ளக் கூடிய சிறு விளக்கு. அப்படித்தான் நான் இருக்க விரும்புகிறேன். மக்கள் கூட்டம் திரண்டு வருகிறது, எல்லோருமே மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அரசியல் உங்கள் கடமை, ஓட்டு உங்கள் உரிமை. அதை, நல்லவர்களுக்கு போட வேண்டும். நல்ல ஆள் என்பதற்கான முதல் தகுதி, நேர்மையானவராகவும், உங்கள் கஷ்ட நஷ்டங்கள் புரிந்தவராகவும் இருக்க வேண்டும். நல்ல நதிகளை எல்லாம் சாக்கடையாகவும், ஆற்றுப் படுகைகளை எல்லாம் கொள்ளையடிக்கும் பேங்காகவும் வைத்திருப்பவர்கள் களையப்பட வேண்டும். அரை நூற்றாண்டுகளாக அவர்கள் செய்தவற்றை மாற்றும் பலம் உங்கள் கையில், முக்கியமாக இளைஞர்கள் கையில் இருக்கிறது. குறிப்பாக பெண்கள் நினைத்தால், அரசியல் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று கமல்ஹாசன் கூறினார்.
இந்நிலையில் கூட்டணி குறித்து ஜனவரியில் முடிவெடுக்கப்படும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், கூட்டணி குறித்து ஜனவரியில் முடிவெடுக்கப்படும் என்றும் நாங்கள் 3வது அணியாக உருவாகிவிட்டோம் என்பது அனைவருக்கும் தெரிந்துவிட்டது என்றும் கூறினார். மேலும் கட்சி தொடங்குவதில் நாடகமாடுகிறாரா ரஜினி? என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், 40 ஆண்டுகால நண்பருக்கு முதலில் உடல்நலம்தான் முக்கியம். பிறகு அவர் அரசியல் தொடர்பான பணிகளை தொடர்வார் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார்.