

சென்னை திருவேற்காடு, ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்தவர் முருகன் (வயது 42). ஆட்டோ டிரைவரான இவர், நேற்று மாலை அம்பத்தூர் கோர்ட்டுக்கு வந்தார். குடிபோதையில் இருந்த அவரை, அங்கு பணியில் இருந்து அம்பத்தூர் போலீசார் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர்.
அப்போது அவர், "எனது நண்பரை குடிபோதையில் சுத்தியலால் அடித்துக்கொன்று விட்டேன். இதனால் கோர்ட்டில் சரண் அடைய வந்ததாக" கூறினார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், முருகனிடம் தீவிரமாக விசாரித்தனர்.
அம்பத்தூர் பட்டரவாக்கத்தை சேர்ந்த சுரேஷ் (42) என்பவர் முருகன் வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார். அவரும் ஆட்டோ டிரைவர்தான். இதனால் இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர்.
நேற்று முன்தினம் நண்பர்கள் இருவரும் சுரேஷ் வீட்டில் ஒன்றாக அமர்ந்து மது குடித்தனர். குடிபோதையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முருகன், சுத்தியலால் சுரேசின் தலையில் அடித்துக்கொலை செய்தார். பின்னர் குடிபோதையில் நண்பர் பிணத்துடன் வீட்டிலேயே தங்கி இருந்தார்.
2 நாட்கள் ஆன பிறகும் சுரேஷின் உடலை வீட்டில் இருந்து அகற்ற முடியாததால் நேற்று மாலை கோர்ட்டில் சரண் அடைய வந்தது, முருகனிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து திருவேற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். வீட்டுக்குள் சுரேஷ் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கொலை செய்யப்பட்ட சுரேஷ் மீது குன்றத்தூர் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.