மதுபோதையில் நண்பர்களுக்குள் மோதல்: தலையில் கட்டையால் தாக்கி தொழிலாளி கொலை

நள்ளிரவில் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
கொலை
Published on: 

வண்டலூர்,

ஊரப்பாக்கத்தில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் சக தொழிலாளியை கட்டையால் அடித்துக் கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தகராறு

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள மாதனபள்ளி காந்தி நகரைச் சேர்ந்தவர் முனி ராஜ் (வயது 38). இவர் செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கத்தில் உள்ள ஒரு சென்ட்ரிங் கடையில் தங்கி வேலை செய்து வந்தார். அதே கடையில் சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த லட்சுமணன் (34) என்பவரும் தங்கி வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இருவரும் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்திவிட்டு, பின்னர் தாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு திரும்பினர். அப்போது நள்ளிரவில் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் இந்த தகராறு கைகலப்பாக மாறியது.

கொலை

இதில் ஆத்திரமடைந்த லட்சுமணன், அருகில் கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து முனிராஜின் தலையில் பலமாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த முனிராஜ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த கிளாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, முனிராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் ஊரப்பாக்கம் அடுத்த காரணைபுதுச்சேரி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த லட்சுமணனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மதுபோதையில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X