வறண்டு கிடக்கும் பழைய கட்டளை மேட்டு வாய்க்கால்

வறண்டு கிடக்கும் பழைய கட்டளை மேட்டு வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்க விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வறண்டு கிடக்கும் பழைய கட்டளை மேட்டு வாய்க்கால்
Published on

வறண்டு கிடக்கும் வாய்க்கால்

கரூர் மாவட்டம் மாயனூரில் இருந்து திருச்சி மாவட்டம் தாயனூர் வரை பழைய, புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் செல்கிறது. இந்த தண்ணீரை பயன்படுத்தி இனுங்கூர், பொய்யாமணி, நங்கவரம், சூரியனூர், நச்சலூர், நெய்தலூர், சேப்ளாப்பட்டி, முதலைப்பட்டி, திருச்சி மாவட்டங்களான புலியூர், தாயனூர் வரை சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை, நெல், கரும்பு, உளுந்து ஆகிய பயிர்கள் பயிரிடப்படுகின்றது.

இந்நிலையில் கடந்த 12-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து வைத்தார். கடந்த 14 நாட்கள் ஆகியும் மாயனூரில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தாயனூர் வரை பாசனம் பெறும் பழைய கட்டளை மேட்டு வாய்க்காலுக்கு இதுவரை பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் வாய்க்கால் வறண்டு கிடக்கிறது.

விவசாயிகள் காத்திருப்பு

இதனால் விவசாயிகளின் நிலங்களில் செடி, கொடிகள் முளைத்து வறண்ட பூமியாக காட்சியளிக்கிறது. இதனால் விவசாயிகள் மிகவும் கவலையில் இருந்து வருகின்றனர். பாசனத்திற்காக விரைவில் தண்ணீர் திறந்து விட்டால் மட்டுமே விவசாயிகளுக்கு சாகுபடி செய்ய ஏதுவாக இருக்கும்.

தற்போது விவசாயிகள் தங்களது வயலில் கட்டளை மேட்டு வாய்க்கால் தண்ணீரை நம்பி உழவு பணி மற்றும் பராமரிப்பு பணி செய்வதற்காக காத்திருக்கின்றனர்.

கோரிக்கை

கடந்த ஆண்டு பருவ மழை பெய்ததாலும், மேட்டூர் அணையில் நீர்மட்டம் அதிகமாக இருந்ததாலும் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் தங்களது விவசாய பணிகளை தொடர்ந்து தங்களது வயலில் நெல் மற்றும் உளுந்து பயிரிட்டனர். தற்போது வாழை சாகுபடிக்காக கன்றுகள் நடப்பட்டுள்ளது. அதனைக் காப்பாற்ற உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும்.

கடந்த ஆண்டு போல் இப்போதும் காலதாமதமாக தண்ணீர் திறந்தால் விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும்.

இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com