நாய் குறுக்கே வந்ததால் விபத்தில் சிக்கி விவசாயி பலி

குலதெய்வ கோவிலுக்கு சென்றபோது நாய் குறுக்கே வந்ததால் விபத்தில் சிக்கி விவசாயி பலியானார். அப்போது உடன் சென்ற மகள் காயமின்றி உயிர்தப்பினார்.
நாய் குறுக்கே வந்ததால் விபத்தில் சிக்கி விவசாயி பலி
Published on

குறுக்கே வந்த நாய்

தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சபாபதி மகன் ராஜி(வயது 54). விவசாயியான இவர் நேற்று துறையூரில் உள்ள தனது குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிட செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது தனது தம்பி மகள் கஸ்தூரியையும்(17) உடன் அழைத்து சென்றார். இந்த நிலையில் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மனகெதி கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக நாய் குறுக்கே வந்துள்ளது.

விவசாயி பலி

இதனால் நிலைதடுமாறி 2 பேரும் கீழே விழுந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் ராஜியை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ராஜியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த விபத்தில் கஸ்தூரி காயம் இன்றி உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com