நோபல் பரிசு பெற்ற நவநீதம்பிள்ளைக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்! - டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

தமிழக மக்கள் சார்பாக நடத்திட, முதல்-அமைச்சர் உடனடியாக முன்முயற்சி எடுக்க வேண்டும் என கிருஷ்ணசாமி வலியுறுத்தினார்.
 டாக்டர் கிருஷ்ணசாமி
Published on: 

சென்னை,

நோபல் பரிசு பெற்ற நவநீதம்பிள்ளைக்குப் பாராட்டு விழா நடத்த வேண்டும் என கிருஷ்ணசாமி வலியுறுத்தினார்.

நவநீதம் பிள்ளைக்கு நோபல் பரிசு

இது தொடர்பாக, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

இந்திய - தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தென்னாப்பிரிக்கப் பிரஜையான நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு கடந்த வாரத்தில் வழங்கப்பட்டது.

அவர் தமிழ் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக மட்டும் நாம் மகிழ்ச்சி கொள்வதோ, பெருமையடைவதோ இல்லை. மாறாக, எவ்வித ஆரவாரமும் இன்றி ஹேக் சர்வதேச நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றிய காலத்தில் ஈழத்தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும், உகாண்டா உட்படப் பல்வேறு தேசங்களில் எளிய மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காகவும் பரிந்து பேசியதோடு, நீதி கிடைப்பதற்காகவும் பாடுபட்டவர்.

பிரம்மாண்ட பாராட்டு விழா

எனவே, அவருக்கு தமிழகத்தில் ஒரு பிரம்மாண்டமான கட்சி சார்பற்ற பாராட்டுக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். இதே கருத்தை உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறனும் வலியுறுத்தியுள்ளார்.

அதேபோல நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செ.சீமான், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி. வேல்முருகன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ. தனியரசு, புரட்சி பாரதம் கட்சி தலைவர் எம். ஜெகன் மூர்த்தி, தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் கே. சி. திருமாறன், தமிழ்நாடு & பாண்டிச்சேரி விஸ்வகர்மா கூட்டமைப்பின் தலைவர் ஜெகத்குரு சிவசண்முக சுந்தர பாபுஜி சுவாமிகள் உள்ளிட்ட அனைவரும் மனப்பூர்வமாக வரவேற்கின்றனர்.

எனவே, இந்தப் பாராட்டுக் கூட்டத்தை முழுக்க முழுக்க ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற நிலை இல்லாமல் தமிழகமே ஒன்றுதிரண்டு பாராட்டுகின்ற வகையில், அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைத்து நடத்தக்கூடிய விதத்தில் தமிழக முதல்-அமைச்சர் விஜய் முன்முயற்சி எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

ஏற்பாடுகளை செய்திட வேண்டும்

எனவே, காலந்தாழ்த்தாது தமிழக அரசின் சார்பில் ஆளுங்கட்சித் தரப்பு, எதிர்க்கட்சிகள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் அடங்கிய ஒரு குழுவை அவரைச் சந்திக்க நேரடியாக அனுப்பி, அவருடைய தேதியைப் பெற்றுத் தமிழகத்திலே பிரம்மாண்டமான ஒரு பாராட்டுக்கூட்டத்தை நடத்துவதன் மூலமாகத்தான் தமிழ் மக்களின் ஒற்றுமையை உலகுக்குப் பறைசாற்ற முடியும். அதேபோன்று ஈழத்தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு இதுவரையிலும் கிடைக்காத நீதியும் கிடைப்பதற்கு உண்டான ஒரு வழிவகை ஏற்படும்.

எனவே, நவநீதம் பிள்ளைக்குப் பாராட்டுக்கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை உடனடியாகச் செய்திட வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சரை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com