இனி முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்..!! தமிழக அரசு அதிரடி

முகக் கவசம் அணியாதவர்கள் மீதான அபராத தொகையை ரூ.200-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இனி முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்..!! தமிழக அரசு அதிரடி
Published on

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு விதிக்கப்பட்டு இருக்கிறது. பெரும்பாலான சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.

பண்டிகை காலம் என்பதால் மக்கள் வெளியே செல்வது அதிகரிக்கும் என்பதால், வழிபாட்டுதலங்கள் மூடப்பட்டு உள்ளது. ஆனாலும் பொது மக்கள் அதிக அளவில் வெளியே சென்று வருவதால் தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இதனிடையே ஒமைக்ரான் மற்றும் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு கொரோனா தடுப்பு வழிக்காட்டுதல் நெறிமுறைகளை அறிவித்தது. இதன்படி பொதுவெளியில் வருபவர்கள் கட்டாயம் முக்கவசம் அணிய வேண்டும் என்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

கொரோனா நடைமுறைகளை கடைப்பிடிக்காத பொதுமக்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காத பொதுமக்களிடம் மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் தலா ரூ.200 அபராதம் வசூலித்து வந்தனர்.

இந்நிலையில் முகக் கவசம் அணியாமல் இருப்பவர்களுக்கு அபராத தொகை 200 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் முகக் கவசம் அணியும் போது, அது மூக்கு மற்றும் வாய்ப் பகுதியை மூடியபடி இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நிருபர்கள் சந்திப்பில் பேசிய சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், ஊரடங்கு கட்டுப்பாடுகளை மக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும். முகக்கவசத்தை முழுமையாக அணிய வேண்டும். முகக்கவசத்தை முழுமையாக அணியவில்லை என்றாலும் அபராதம் விதிக்கப்படும். ஒமைக்ரான் வேகமாக பரவும் நிலையில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். அடுத்த சில நாட்களுக்கு மக்கள் கவனமாக இருக்க வேண்டும். கட்டாயம் முகக் கவசம் அணிந்தால், நோய் பரவலின் தீவிர தன்மை குறையும் என்று அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com