கன்னியாகுமரியில் தனியார் விடுதியில் தீ விபத்து; சுற்றுலா பயணிகள் சிக்கி தவிப்பு

கன்னியாகுமரியில் தனியார் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சுற்றுலா பயணிகள் சிக்கி தவித்தனர். அவர்களை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர்.
கன்னியாகுமரியில் தனியார் விடுதியில் தீ விபத்து; சுற்றுலா பயணிகள் சிக்கி தவிப்பு
Published on

கன்னியாகுமரி:

கன்னியாகுமரியில் தனியார் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சுற்றுலா பயணிகள் சிக்கி தவித்தனர். அவர்களை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர்.

தனியார் விடுதி

சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார். இவர்களில் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கன்னியாகுமரியில் தங்கியிருந்து சுற்றுலா தலங்களை பார்வையிட்டு செல்வார்கள். இதற்காக கன்னியாகுமரியில் ஏராளமான தனியார் விடுதிகள் உள்ளன. இந்த விடுதிகள் எப்போதும் சுற்றுலா பயணிகளால் நிறைந்தே இருக்கும்.

இந்தநிலையில் நேற்று இங்குள்ள ஒரு தனியார் விடுதியில் மாடியில் உள்ள மேல் தளத்தில் இருந்து திடீரென கரும்புகை வந்தது. சிறிது நேரத்தில் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. உடனே விடுதி ஊழியர்கள் அந்த தளத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது அங்குள்ள பூட்டிய அறையில் தீ எரிந்த நிலையில் புகை பரவியது தெரிய வந்தது. உடனே ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.

சுற்றுலா பயணிகள் ஓட்டம்

இதற்கிடையே காற்று வேகமாக வீசியதால் தீ மற்ற அறைகளுக்கும் பரவத் தொடங்கியது. இதைப்பார்த்து சில அறைகளில் தங்கி இருந்த சுற்றுலா பயணிகள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடினர். ஆனால், தீ எரிந்த அறையின் பக்கத்து அறைகளில் தங்கி இருந்தவர்கள் வெளியே வரமுடியாமல் தவித்தனர்.

இதுகுறித்து கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் பென்னட் தம்பி மற்றும் சிறப்பு அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் புகை மண்டலத்தில் சிக்கி இருந்த சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

தொடர்ந்து தீப்பிடித்த அறையை உடைத்து உள்ளே சென்று தீயை மேலும் பரவ விடாமல் அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீ முழுமையாக அணைக்கப்பட்டது.

மின்கசிவு

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அறையில் உள்ள குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ பிடித்தது தெரிய வந்தது. இதில் அறையில் இருந்த டி.வி., விரிப்புகள், திரை சீலைகள் போன்றவை எரிந்து நாசமாகின. சரியான நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. கன்னியாகுமரியில் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தினால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

---

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com