

விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் ஒன்றியம், ஆதிச்சனுார் -வசந்தகிருஷ்ணாபுரம் என்ற பகுதியில், தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு நடக்கிறது. இதில், 20 -30 மீட் டர் சுற்றளவுள்ள, 10க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் தற்போது கண்டறியப்பட்டு, அகழாய்வு இயக்குநர் பொ.கோ.லோகநாதன், உதவி இயக்குநர்கள் பரத் - குமார், சுரேஷ் ஆகியோர் தலைமையில், ஏழு கல் வட்டங்களில் அகழாய்வு பணிகள் நடக்கின்றன.
இதுவரை நடந்த அகழாய்வில் இறந்தவர்களை மண் தொட்டியான ஈமப்பேழையில் வைத்து புதைப்பது, தரையில் கிடக்கையாக புதைப்பது எனும், இரண்டு விதமான புதைக்குழிகள் கண்டறியப்பட்டுள்ளன.
நாட்டில் இதுவரை கண்டறியப்படாத புதிய வகையில், புதைப்பிட பகுதியில், கல்வட்டத்தைப் போலவே வரிசையாக சங்குகள் அடுக் கப்பட்டு உள்ளன. இது, தொல்லியல் ஆய்வாளர்களை ஈர்த்துள்ளது.
இதுகுறித்து, அகழாய்வு இயக்குநர் லோகநாதன் கூறியதாவது:
வடமாவட்டங்களில், மலைப்பாங்கான பகுதிகள் அதிகம் என்பதால், இங்கு இறந்தவர்களை புதைத்த பின், அதைச்சுற்றி பல கைக்கற்களால் நான்கு புறமும் சுவர் போல எழுப்பி, அதன் மீது, மிகப்பெரிய கல்லால் மூடி, அதைச் சுற்றிலும் கற்களை வரிசை வரிசையாக வட்டவடிவில் நிரப்புவர்; இதை, கல்வட்டம் என்பர்.
ஆதிச்சனுாரில் இதே வகையிலான கல்வட்டங்களை கண்டறிந்துள்ளோம். இங்கு, 10-20 மீட் டர் சுற்றளவுள்ள மூடுகல் பயன்படுத்தப்பட்டு உள்ளது. அதைச்சுற்றி, 2-3 கல்வட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மூடுகல்லின் மீதும் அதை நீக்கிய பின் புதை குழியை சுற்றிலும், ஒன்று அல்லது இரண்டு வரிசைகளில், சங்குகள் அடுக்கப்பட்டுள்ளன. இதுபோல, புதைப்பிடத்தில் சங்குகளை வைக்கும் பழக்கம், வேறு எங்கும் நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைக் கவில்லை.
இதுவரை, மூன்று கல் வட்டங்களில் மூடுகற்கள் நீக்கப்பட்டுள்ளன. அவற்றில், இரண்டில் ஈமப்பேழையும், ஒன்றில் தரைமட்ட புதைப்பு முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒன்றில், ஈமப்பேழை இடுப்பு அல்லது கால் எலும்பு மட்டும், சிறிய அளவில் வெளிப்பட்டு உள்ளது. எலும்பை சுற்றிலும், சடங்கு கலையங்கள் அடுக்கப்பட்டு உள்ளன. அதன் அருகில், சில சங்கு ஆபரணங்கள் உள்ளிட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.
சங்காலான கழுத்தணியில், நட்சத்திர குறியீடு பொறிக்கப்பட்டுள்ளது. இன்னொரு புதைக்குழியில் செம்பு கிண்ணமும், மற்றொன்றில் இரும்பு வாளும் வெளிப்பட்டுள்ளன. இந்த தொல்லியல் பகுதி, 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட இரும்பு காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம். தொடர்ந்து அகழாய்வுப் பணிகள் நடக்கின்றன. அவை முடிந்த பின்தான், முழு விபரம் தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.