பாமனி ஆற்றின் குறுக்கே கைப்பிடி இல்லாத நடைபாலம்

நீடாமங்கலம் அருகே பாமனி ஆற்றின் குறுக்கே உள்ள கைப்பிடி இல்லாத நடைபாலத்தை சீரமைக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாமனி ஆற்றின் குறுக்கே கைப்பிடி இல்லாத நடைபாலம்
Published on

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் அருகே பாமனி ஆற்றின் குறுக்கே உள்ள கைப்பிடி இல்லாத நடைபாலத்தை சீரமைக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாமனி ஆறு

நீடாமங்கலம் ஒன்றியம் பரப்பனாமேடு ஊராட்சி, கடம்பூர் கிராமத்தில் இருந்து, பாமனி ஆற்றின் குறுக்கே கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக செல்லும் வகையில், இருபுறங்களிலும் கம்பிகள் அமைத்து கைப்பிடி அமைக்கப்பட்டது. இந்த பாலம் வழியாக அந்த கிராமமக்கள் நடந்தும், சைக்கிள் மற்றும் அவசரத்திற்கு இருசக்கர மோட்டார் வாகனங்களிலும் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் அந்த பாலத்தில் இருபுறங்களிலும் அமைக்கப்பட்டிருந்த கைப்பிடி கம்பிகளை சமூக விரோதிகள் கழட்டி எடுத்து சென்றுள்ளனர். இந்த பாலத்தின் வழியாக மேலப்பூவனூர், பூவனூர், வீரவநல்லூர், மேலக்கடம்பூர், பரப்பனாமேடு, கீழக்கடம்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், நீடாமங்கலம், மன்னார்குடி, கும்பகோணம், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று படித்து வருகின்றனர்.

கைப்பிடி இல்லாத நடைபாலம்

அதேபோன்று அப்பகுதி பொதுமக்களும் இந்த பாமனி ஆற்று பாலம் வழியாக வந்துதான் வங்கிகள், அரசு அலுவலகங்களுக்கு மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்கி வருகின்றனர். இந்த நடை பாலத்தில் கைப்பிடி கம்பிகள் இல்லாததால் ஆற்றில், தண்ணீர் செல்லும் போது மாணவர்கள், பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

மேலும் இரு சக்கர வாகனத்தில் சென்ற சிலர் இந்த பாலத்தில் இருந்து கீழே விழுந்து அடிப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே உயிர்சேதம் ஏற்படும் முன் அப்பகுதி பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாமனி ஆற்றின் குறுக்கே உள்ள நடை பாலத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com