தாழம்பூர் அருகே வாலிபர் கொலை வழக்கில் நண்பர் கைது

தாழம்பூர் அருகே வாலிபர் கொலை வழக்கில் நண்பர் கைது செய்யப்பட்டார்.
தாழம்பூர் அருகே வாலிபர் கொலை வழக்கில் நண்பர் கைது
Published on

செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூர் அடுத்த பொன்மார் வனப்பகுதியில் குத்திக்கொலை செய்யப்பட்ட நிலையில் ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் மதுரப்பாக்கம், மந்தைவெளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரவி என்பவரின் மகன் லோகநாதன் (வயது 20) என்பது தெரிய வந்தது. கொலை செய்யப்பட்ட நபரின் மீது சேலையூர் போலீஸ் நிலையத்தில் கொலை, கொள்ளை, அடிதடி வழக்குகள் இருப்பதும் சமீபத்தில் கொலை வழக்கு ஒன்றில் ஜாமீனில் வந்திருப்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் லோகநாதனின் செல்போன் பேச்சுகளை ஆய்வு செய்தபோது பொன்மார் பகுதியை சேர்ந்த சேட்டு என்பவரின் மகன் ஈஸ்வரன் (21) என்பவருடன் பேசியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரது வீட்டுக்கு சென்றபோது அவர் வெளியூர் சென்றிருப்பதாக வீட்டில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் செல்போன் சிக்னலை வைத்து ஈஸ்வரனை திருவொற்றியூரில் வைத்து கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். சேலையூர் பெண் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்த பிறகு இதுபோல் அடிக்கடி கொலை, கொள்ளை செய்யலாம், அப்போதுதான் நாம் ரவுடி ஆக முடியும் என்று கூறி வற்புறுத்தியது தெரியவந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இருவரும் ஒன்றாக மது குடித்தபோது இது குறித்து பேச்சு எழுந்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பீர் பாட்டிலை உடைத்து லோகநாதன் தலையில் அடித்து கழுத்தில் குத்திக்கொலை செய்ததாகவும் ஈஸ்வரன் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து தாழம்பூர் போலீசார் ஈஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com