வாலிபரை கொன்ற வழக்கில் தலைமறைவான வாலிபர் கைது: பரபரப்பு தகவல்கள்

குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரித்தால் தான் கொலைக்கான உண்மை தகவல் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.
அகில், கதிரேசன் மகன் முகேஷ், கைதான முகேஷ்
அகில், கதிரேசன் மகன் முகேஷ், கைதான முகேஷ்
Published on: 

திங்கள்சந்தை,

திங்கள்சந்தை அருகே வாலிபரை வெட்டிக் கொன்ற வழக்கில் தலைமறைவான வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

முன்விரோதம்

திங்கள்சந்தை அருகே உள்ள காட்டுவிளை சிறிய ஆற்றின்கரை பகுதியை சேர்ந்தவர் உசேன். இவருடைய மகன் ஷமீம் (வயது 27). துபாயில் வேலை பார்த்த அவர் கடந்த 15-ந் தேதி சொந்த ஊருக்கு திரும்பினார். ஏற்கனவே ஷமீமுக்கும், காட்டுவிளை பகுதியை சேர்ந்த கதிரேசன் மகன் முகேஷ் (27) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

ஷமீம் சொந்த ஊருக்கு வந்ததை அறிந்த முகேஷ் அவர் மீது கோபத்தில் இருந்தார். இந்தநிலையில் நெடுத்தறவிளை பகுதியை சேர்ந்த மூர்த்தி மகன் முகேஷ் என்பவருடைய வீட்டில் தங்கியிருந்த வடமாநில தொழிலாளர்களை ஷமீம் திட்டியதாக தெரிகிறது. அதாவது தங்களுடைய வீட்டு முன் உள்ள பாதை வழியாக சென்றதால் அவர் கண்டித்துள்ளார்.

வெட்டிக் கொலை

இதனை அறிந்த மூர்த்தி மகன் முகேஷ், தனது நண்பரான ஊற்றுக்குழி பகுதியை சேர்ந்த அகிலுடன் சேர்ந்து 26-ந் தேதி இரவு ஷமீம் வீட்டுக்கு சென்று எச்சரித்துள்ளனர். பிறகு இவர்கள் கதிரசேன் மகன் முகேஷிடம் தெரிவித்தனர்.

ஏற்கனவே கோபத்தில் இருந்த முகேஷ், ஷமீமை கொல்ல நண்பர்களுடன் உடனடியாக திட்டமிட்டார். சிறிது நேரத்தில் அரிவாள் மனையை தூக்கிக் கொண்டு ஷமீம் வீடு நோக்கி சென்றார். அங்கு கண்ணிமைக்கும் நேரத்தில் ஓட, ஓட விரட்டி அவரை வெட்டிக் கொன்று விட்டு தப்பினார். அதுவும் இந்த கொலை வெறிதாக்குதல் ஷமீம் தாய் மற்றும் சில பெண்கள் கண் முன்னே நடந்த சம்பவம் பெரும் பதற்றத்தை உருவாக்கியது.

பரபரப்பு தகவல்கள்

இந்த கொலை தொடர்பாக இரணியல் போலீசார் வழக்குப்பதிந்து 3 பேரையும் தேடி வந்தனர். இதில் தப்பி ஓடிய கதிரேசன் மகன் முகேஷ், மூர்த்தி மகன் முகேஷ் ஆகிய 2 பேரும் நேற்றுமுன்தினம் நாகர்கோவில் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

இந்த கொலைக்கான முன்விரோதம் குறித்து நடந்த விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதில் ஷமீமுக்கும், கதிரேசன் மகன் முகேசுக்கும் கடந்த 10 ஆண்டுகளாக முன்விரோத பகை இருந்துள்ளது. அதாவது முகேஷின் மோட்டார் சைக்கிளை ஷமீம் தீ வைத்து எரித்துள்ளார். பின்னர் இந்த விவகாரத்தில் பஞ்சாயத்து பேசி முகேசுக்கு ரூ.80 ஆயிரம் கொடுக்கப்பட்டது.

பதிலுக்கு பதில்..

எனினும் முகேசுக்கு, ஷமீம் மீது ஆத்திரம் தீரவில்லையாம். பதிலுக்கு பதிலாக அவரது மோட்டார் சைக்கிளை 4 ஆண்டுகளுக்கு முன்பு தீ வைத்து எரித்துள்ளார். இது தொடர்பான வழக்கில் இரணியல் போலீசார் முகேஷை கைது செய்தனர்.

இதுபோன்ற நடவடிக்கையால் ஷமீம் மீது கோபத்தில் இருந்த முகேஷ், நண்பர்களிடமும் தகராறு செய்த சம்பவத்தால், அவர் மீது ஆவேசத்தின் உச்சிக்கே சென்று விட்டார். பிறகு அது ஷமீம் கொலையில் முடிந்துள்ளது. அதே சமயத்தில் சரண் அடைந்த 2 பேரையும் காவலில் எடுத்து விசாரித்தால் தான் கொலைக்கான உண்மை தகவல் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

தலைமறைவானவர் சிக்கினார்

இதற்கிடையே ஷமீம் கொலை வழக்கில் தலைமறைவான ஊற்றுக்குழியை சேர்ந்த அகிலை போலீசார் தேடி வந்த நிலையில், மேக்கா மண்டபத்தில் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து சென்று அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

X