கோவிலில் அகல் விளக்கு ஏற்றியபோது தீயில் கருகி சிறுமி சாவு

பண்ருட்டி அருகே கோவிலில் அகல் விளக்கு ஏற்றியபோது தீயில் கருகி சிறுமி பலியானாள்.
கோவிலில் அகல் விளக்கு ஏற்றியபோது தீயில் கருகி சிறுமி சாவு
Published on

பண்ருட்டி, 

பண்ருட்டி அருகே உள்ள மாளிகம்பட்டை சேர்ந்தவர் காசிநாதன் (வயது 36). இவரது மகள் திவ்ய பிரியா (8). இவள் அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தாள். சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் விழா நடந்தது. அப்போது திவ்ய பிரியா தனது பெற்றோருடன் சேர்ந்து கோவிலில் அகல் விளக்கு ஏற்றியுள்ளார்.

அந்த சமயத்தில் அகல்விளக்கில் எரிந்து கொண்டிருந்த தீ, எதிர்பாராதவிதமாக அவளது ஆடையில் பற்றியது. இதில் மளமளவென பரவிய தீ, திவ்ய பிரியாவின் உடல் முழுவதும் பற்றி எரிந்தது. இதில் அவள் வலியால் அலறி துடித்தாள். இதை பார்த்து பதறிய பெற்றோர், அவளை மீட்டனர். இருப்பினும் தீயில் கருகிய அவளை சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சை பலனின்றி பலி

பின்னர் அவள், மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி திவ்ய பிரியா பரிதாபமாக உயிரிழந்தாள்.

இதுகுறித்து காசிநாதன், காடாம்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலில் அகல் விளக்கு ஏற்றிய போது ஆடையில் தீப்பற்றி எரிந்ததில் சிறுமி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com