

கருமத்தம்பட்டி
கருமத்தம்பட்டி அருகே அரசு பஸ் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பஸ்சில் இருந்த 63 பயணிகளும் உடனடியாக கீழே இறங்கியதால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது:-
அரசு பஸ்
ஆயுதபூஜை பண்டிகை விடுமுறை நேற்றுடன் முடிவடைந்தது. இதன் காரணமாக சொந்த ஊருக்கு சென்ற கோவையில் வேலை செய்து வரும் பலர் மீண்டும் கோவைக்கு திரும்பி வருகிறார்கள். இதனால் கோவைக்கு வரும் பஸ்களில் பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிந்து வருகிறது.
அத்துடன் பல்வேறு பகுதிகளில் இருந்து கோவைக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. இந்த நிலையில் சேலத்தில் இருந்து கோவை நோக்கி நேற்று மதியம் அரசு பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சில் மொத்தம் 63 பேர் இருந்தனர். பஸ்சை சிவக்குமார் என்பவர் ஓட்டினார். கண்டக்டராக ராஜா என்பவர் இருந்தார்.
வித்தியாசமான சத்தம்
அந்த பஸ் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே தெக்கலூரில் உள்ள சென்னியாண்டவர் கோவிலை தாண்டி மேம்பாலத்தில் மாலை 4.30 மணிக்கு வந்து கொண்டு இருந்தது. அப்போது பஸ்சின் என்ஜின் பகுதியில் இருந்து திடீரென்று வித்தியாசமான சத்தம் கேட்டது.
உடனே டிரைவர் சிவக்குமார் அந்த பஸ்சை மேம்பாலத்தின் ஓரத்தில் நிறுத்தினார். தொடர்ந்து அவர் பஸ்சை ஆப் செய்து ஸ்டார்ட் செய்தார். அப்போது என்ஜினில் இருந்து ஏதோ சத்தம் வந்தது.
தீப்பிடித்து எரிந்தது
உடனே விபரீதம் நடக்க போகிறது என்பதை உணர்ந்த டிரைவர் பஸ்சை ஆப் செய்துவிட்டு அதில் இருந்த பயணிகள் அனைவரையும் கீழே இறங்க சொன்னார். இதனால் பஸ்சில் இருந்து அனைத்து பயணிகளும் உடனடியாக கீழே இறங்கினார்கள்.
பின்னர் சிறிது நேரத்தில் பஸ்சின் முன்பகுதியில் லேசாக புகை எழும்பியது. இதனால் டிரைவர் மற்றும் கண்டக்டரும் பஸ்சை விட்டு கீழே இறங்கினார்கள். அப்போது திடீரென்று பஸ்சில் தீப்பிடிக்க தொடங்கியது. பின்னர் அந்த தீ மளமளவென அனைத்து பகுதிகளுக்கும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது.
தீ முற்றிலும் அணைப்பு
இதை பார்த்து அங்கு நின்றிருந்த பயணிகளும், அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் இது குறித்து கருமத்தம்பட்டி போலீஸ் நிலையம் மற்றும் சூலூர், அவினாசியில் உள்ள தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். பஸ் அருகே யாரையும் விடவில்லை. அத்துடன் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து பஸ்சில் பிடித்த தீயை அணைத்தனர். இதில் அந்த பஸ் முழுவதும் எரிந்து சாம்பல் ஆனது. இதனால் அந்த பஸ் எலும்புக்கூடு போன்று காட்சியளித்தது.
போலீசார் விசாரணை
பஸ்சில் இருந்து வித்தியாசமான சத்தம் வந்ததும், பஸ்சை சாலையின் ஓரத்தில் நிறுத்தி பயணிகளை டிரைவர் கீழே இறக்கிவிட்டதால் இந்த பஸ்சில் பயணித்த 63 பயணிகளும் எந்த ஒரு சேதமும் ஏற்படாமல், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
இந்த பஸ் விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.