

காவேரிப்பாக்கம்,
காவேரிப்பாக்கம் அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் தணிகாசலம் (வயது 46). இவர் கர்ணாவூர் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். காவேரிப்பாக்கம் பஸ் நிலையம் அருகே உள்ள ஜேசிகே நகரில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை பள்ளிக்கு சென்றுள்ள தன் மகனை அழைத்து வருவதற்காக காவேரிப்பாக்கம் பஸ் நிலையம் நோக்கி வீட்டில் இருந்து நடந்து சென்றுள்ளார். அப்போது தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே உள்ள சுவர் மீது சுருண்டு கீழே விழுந்துள்ளார்.
இச்சம்பவத்தை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பார்த்த போது அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக அவரது மனைவி பிரியா(40) இன்று காவேரிப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.