

சென்னை,
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் முஸ்லிம்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த 14-ந் தேதி முஸ்லிம் அமைப்பினரால் தொடங்கப்பட்ட போராட்டம் தொடர்ந்து 14-வது நாளாக நேற்றும் நீடித்தது.
இந்த நிலையில், வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக முதல்-அமைச்சரிடம் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டது. அதன் பேரில், போராட்டக்குழுவின் தலைவர் லத்தீப், ஒருங்கிணைப்பாளர் முகமது ரஷீத் மற்றும் பெண்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் சென்னை பசுமைவெளி சாலையில் உள்ள இல்லத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேற்று இரவு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின்போது, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் நடைபெறும் அ.தி.மு.க. அரசு சிறுபான்மையினருக்கு என்றும் பாதுகாப்பாக இருக்கும். எனவே போராட்டத்தை கைவிடுமாறு முதல்-அமைச்சர் சார்பில் வலியுறுத்தப்பட்டது. எனினும், போராட்டக்குழு பிரதிநிதிகள் தங்களின் முடிவு குறித்து நிருபர்களிடம் எதுவும் தெரிவிக்கவில்லை.
முதல்-அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து போராட்ட களத்தில் இருப்பவர்களுடன் ஆலோசனை செய்து அடுத்த கட்ட முடிவு எடுப்பார்கள் என்று தெரிகிறது.