

ராமநாதபுரம்,
கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு பண்டிகைகளை முன்னிட்டு, ராமநாதபுரத்தில் உள்ள பிரபல தனியார் பேக்கரியில் 4,000 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட பிளம் கேக் தயாரிக்கும் பணிகள் நேற்று கோலாகலமாகத் தொடங்கின.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்பே பழங்களை ஊறவைக்கும் பாரம்பரிய முறைப்படி கேக் மிக்சிங் நிகழ்வு நேற்று (திங்கட்கிழமை) நடத்தப்பட்டது. இதில் முந்திரி, பாதாம், உலர் திராட்சை, அத்திப்பழம், செர்ரி, பேரீச்சம்பழம் உள்ளிட்ட சுமார் 1,000 கிலோ (1 டன்) எடையிலான பல்வேறு வகையான உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் வகைகள் பயன்படுத்தப்பட்டன.
பெரிய அளவிலான பாத்திரங்களில் கொட்டப்பட்ட இந்த உலர் பழங்களுடன் வாசனைத் திரவியங்கள், ஒயின் மற்றும் பல்வேறு பழச்சாறுகள் ஊற்றப்பட்டு நன்கு கலக்கப்பட்டன.
இந்த கேக் மிக்சிங் நிகழ்வில் பங்கேற்ற பேக்கரி ஊழியர்கள் மற்றும் சமையல் கலைஞர்கள், கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பிகளை அணிந்து, ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டு உற்சாகத்துடன் பழங்களைக் கலந்தனர்.
தற்போது தயார் செய்யப்பட்டுள்ள இந்தப் பழக் கலவை, காற்றுப்புகாத வகையில் சுமார் ஒரு மாதம் வரை பதப்படுத்தப்பட்டு வைக்கப்படும். அதன் பின்னர், டிசம்பர் 3-வது வாரத்தில் 4,000 கிலோ சுவையான பிளம் கேக்குகளாகத் தயாரிக்கப்பட்டு பொதுமக்கள் விற்பனைக்குக் கொண்டுவரப்படும் என பேக்கரி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.