வடபழனி மெட்ரோ ரெயில் மேம்பாலத்தில் பிரமாண்ட இணைப்பு பாலம்: மெட்ரோ நிர்வாகம் சாதனை

வடபழனி மெட்ரோ ரெயில் மேம்பாலத்தில் பிரமாண்ட இணைப்பு பாலம் துல்லியமாக நிறுவப்பட்டன.
சென்னை,
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடம் அமைக்கும் போது வடபழனியில் ஒரு முக்கியமான சவாலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதாவது, இந்த புதிய வழித்தடம் ஏற்கனவே இயங்கிக்கொண்டிருக்கும் மெட்ரோ ரெயில் மேம்பாலத்தின் மேல் அமைக்க திட்டமிடப்பட்டது.
கடுமையான போக்குவரத்து நெரிசல், ஏற்கனவே இயங்கும் மெட்ரோ ரெயில் பாதை காரணமாக கிரேன் மூலம் கட்டுமானப் பொருட்களை மேம்பாலத்தின் கட்டுமானத்திற்கு பயன்படுத்துவது சாத்தியமில்லை என கண்டறியப்பட்டது. எனவே, ‘லான்சிங் கிர்டர்' என்ற சிறப்பு முறை பயன்படுத்தப்பட்டது. இதன் மூலம், பிரம்மாண்டமான ‘யு-கிர்டர்' பாலத்தின் பகுதிகள் பாதுகாப்பாகவும், துல்லியமாகவும் நிறுவப்பட்டன.
இதேபோல, 23 மீட்டர் நீளம், 10.46 மீட்டர் அகலம், 3.5 மீட்டர் உயரம் கொண்ட ஒரு பிரம்மாண்ட தூண் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், 470 கன மீட்டர் கான்கிரீட், 1,200 டன் இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிரமாண்ட தூண்கள் 2 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இது மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் என்ஜினீயரிங் துறையின் ஒரு சாதனையாகும். கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடத்தில் அமைய உள்ள வடபழனி மெட்ரோ நிலையம் 3 தளங்களைக் கொண்டது. அதாவது, வணிக தளம், பொதுத்தளம், நடைமேடைத் தளம் என 3 தளங்கள் அமைக்கப்பட இருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






