ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்க அலங்காநல்லூரில் நவீன வசதிகளுடன் மாபெரும் அரங்கம்

பார்வையாளர்கள் பாதுகாப்புடன் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்க அலங்காநல்லூரில் நவீன வசதிகளுடன் மாபெரும் அரங்கம் அமைக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.
ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்க அலங்காநல்லூரில் நவீன வசதிகளுடன் மாபெரும் அரங்கம்
Published on

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமைச்செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக மதுரை மாவட்டத்தில் 51 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார். மேலும், 49 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 67,831 பயனாளிகளுக்கு ரூ.219 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மு.க.ஸ்டாலின் வழங்கி, பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

சங்க கால நகரமாக மதுரை இருந்தாலும் நாம் பார்க்கும் நவீன மதுரையை உருவாக்கியது தி.மு.க. அரசு தான். சங்கம் வளர்த்த மதுரையில் கருணாநிதி பெயரில் நூலகம் அமையப்போகிறது. 114 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அது கட்டப்பட இருக்கிறது. காலத்தால் அழிக்க முடியாத அறிவுக்கருவூலமாக கலைஞர் நினைவு நூலகம் அமையப்போகிறது.

அதேபோல் மதுரை நகரை மேம்படுத்துவதற்காக மதுரை நகர வளர்ச்சிக் குழுமத்தை உருவாக்கி இருக்கிறோம். மதுரை மாநகருக்கு பல்வேறு திட்டப்பணிகளை செயல்படுத்தித்தர உள்ளோம். இந்த வளர்ச்சித் திட்டங்களை தயாரித்து செயல்படுத்த 14 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளோம்.

நெரிசலை குறைக்க திட்டம்

மதுரை மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட வார்டுகளில் பாதாள சாக்கடை வசதிகளை அமைக்கவும், இந்த வசதி ஏற்கனவே உள்ள பகுதிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு பணிகளை மேம்படுத்தவும் 500 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டப்பணிகள் செயல்படுத்தப்படும்.

மதுரை நகரின் மைய பகுதியில் தற்போது அமைந்துள்ள பல்வேறு மொத்த விற்பனை சந்தைகள் அனைத்தையும் புறநகர் பகுதிகளுக்கு மாற்றி, நகரின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான திட்டம் 50 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும்.

அலங்காநல்லூரில் அரங்கம்

மதுரையில் புதிய சிப்காட் தொழில் பூங்கா ஒன்று அமைக்கப்படும். உலகத் தமிழர்களின் உணர்வோடு கலந்துவிட்ட பண்பாட்டு அடையாளமான ஏறு தழுவுதலை நம் வீர விளையாட்டை முறைப்படுத்தி பாதுகாப்பது நம் கடமையாகும். உலகெங்கிலும் இருந்து வரும் சுற்றுலா பயணிகளை கவரக்கூடிய வகையில் நவீன வசதிகளுடன் கூடிய மாபெரும் அரங்கம் ஒன்று மதுரை, அலங்காநல்லூர் பகுதியில் அமைக்கப்படும்.

தமிழரின் வீர விளையாட்டுகள் மற்றும் பாரம்பரிய காளை இனங்கள் குறித்த அருங்காட்சியகம் ஒன்று ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் பாதுகாப்புடன் போட்டியை கண்டு களிக்கக்கூடிய வகையில் நிரந்தர அரங்கம் வீரர்கள் மற்றும் காளைகளின் நலம் காக்க மருத்துவமனைகள் என பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டதாக இந்த திட்டம் அமையும்.

முக்கியத்துவம் தருவோம்

ஊர் ஊராக - பகுதி பகுதியாக - என்னென்ன தேவையோ அவை அனைத்தையும் செய்து கொடுக்கும் அரசாக இந்த அரசு இருக்கும். ஊரின் தேவை - ஒரு வட்டாரத்தின் தேவை - ஒரு தெருவின் தேவை - தனிப்பட்ட ஒரு மனிதனின் தேவை என்ன என்பதை கேட்டறிந்து நிறைவேற்றித்தரும் அரசாக இந்த அரசு இருக்கும். மைக்ரோ அளவிலான பிரச்சினையையும் கூர்மையாக பார்த்து நிவர்த்தி செய்யும் அரசாக இந்த அரசு இருக்கும். பெரிய, பெரிய திட்டங்களுக்கு எந்தளவு முக்கியத்துவம் தருகிறோமோ - அதே அளவுக்கு ஒரு தனிமனிதனின் விருப்பத்துக்கும், தேவைக்கும் முக்கியத்துவம் தரும் அரசாக நாங்கள் இருப்போம். அதனால்தான் ஒட்டுமொத்தமாக மதுரை வளர்ச்சிக்கான நகர வளர்ச்சி குழுமத்தை அமைத்துள்ளோம். தனி மனிதர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்துள்ளோம். இதுதான் எங்களது ஆட்சியின் இலக்கணம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com