

மதுரை,
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் இன்று (சனிக்கிழமை) தீபம் ஏற்றப்பட்டது. இதன்படி சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பு நிறைவேற்றப்பட்டது.
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருநாளில் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள தீப மண்டபத்தில் தீபம் ஏற்றப்படுவது வழக்கம்.
இந்நிலையில் கார்த்திகை தீபத்திருநாளில் ஒருநாள் மட்டும் மலை மீது உள்ள தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்து சுப்ரீம்கோர்ட்டு கடந்த 20-ந் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை நிறைவேற்றுவதற்கான ஒருங்கிணைப்பு அதிகாரியாக கலெக்டர் இருப்பார் என தெரிவித்த சுப்ரீம் கோர்ட்டு இது குறித்த அறிக்கையை 3 நாட்களுக்குள் கோர்ட்டில் சமர்ப்பிக்க அறிவுறுத்தியது.
ஆனால், சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தலின்படி மலைத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. வழக்கமாக ஏற்றப்படும் இடத்தில் மட்டுமே தீபம் ஏற்றப்பட்டது. மேலும் தீப விவகாரம் குறித்து மதுரை மாவட்ட கலெக்டர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கையில், "திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் முறையான அனுமதியை வழங்காததே மலைத்தூணில் தீபம் ஏற்றப்படாததற்கு காரணம்” என்று கூறியிருந்தார்.
முன்பே எடுத்த முடிவு
இதையடுத்து உத்தரவை நிறைவேற்றாததால் 3 கோர்ட்டு அவமதிப்பு வழக்குகள் தொடரப்பட்டன. சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் எம்.பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்குகளை நேற்று விசாரித்தது. அப்போது மனுதாரர் தரப்பு, மாவட்ட நிர்வாகம், மத்திய தொல்லியல் துறை சார்பில் காரசார வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
வாதங்கள் முடிவடைந்தநிலையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தமிழக அரசு திட்டமிட்டு மீறிய தாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:-
சுப்ரீம் கோர்ட்டின் அதிகாரத்தை நீர்த்து போக செய்ய முடியாது. கோர்ட்டு உத்தரவுகள் மெத்தனமாக கையாளப்படும்போது, அதனை பார்த்துக்கொண்டு நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். இத்தகைய சூழ்நிலைகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டிய நிலைமை ஏற்படுகிறது. இல்லைஎனில், அது அரசியலமைப்பு சார்ந்த குழப்பத்துக்கு வழிவகுக்கும். எந்தவொரு அதிகாரத்துக்கும் சுப்ரீம் கோர்ட்டு அடிபணியாது.
இந்த கோர்ட்டின் உத்தரவு என்பது யாரும், எந்த அதிகாரியும் பேரம் பேசுவதற்கானது அல்ல. அதிகாரிகள் அரசியல் எஜமானர்களின் விருப்பத்துக்கு ஏற்ப செயல்பட்டு, சட்டத்தின் ஆட்சிக்கு எதிராக செயல்பட்டுள்ளனர். இதில் கோர்ட்டின் உத்தரவை வெளிப்படையாக மீறியுள்ளனர்.
சுப்ரீம் கோர்ட்டின் அதிகாரத்தை அவமதிக்கும் வகையில் திட்டமிட்டு செயல்பட்டுள்ளனர். தேவஸ்தானம் வாரியம், கடந்த 20-ந் தேதி உத்தரவுக்கு திரித்து பொருள் கொண்டு, கோர்ட்டு உத்தரவை மீறிச் செயல்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அதிகாரிகளின் செயல்பாடுகள் நிர்வாக சீர்குலைவை வெளிப்படுத்துகிறது. கலெக்டர், தேவஸ்தானத்தின் தீர்மானத்தின் பின்னால் ஒளிந்து கொள்கிறார். அவரின் அறிக்கை திருப்தி அளிக்கவில்லை.
எனவே திருப்பரங்குன்றம் கோவில் ஸ்தானீகர்களுடனான ஆலோசனைக்கு பின்னர் அங்குள்ள மலைத்தூணில் இன்று (சனிக்கிழமை) தீபம் ஏற்ற வேண்டும். மலை உச்சியில் ஏற்கனவே ஏற்றப்பட்ட தீபம் எரிந்து கொண்டிருந்தால், அதில் இருக்கும் ஜோதியை கொண்டு மலைத்தூணில் தீபம் ஏற்றலாம். மேலும், பக்தர்கள் மலையில் விளக்கேற்ற அனுமதிக்கலாம்.
மலையில் உள்ள தர்காவை ஒட்டிய 50 மீட்டர் பகுதியை பாதுகாக்க வேண்டும். தர்காவுக்கு செல்லும் எந்தவொரு பக்தரும் பாதிக்கப்பட கூடாது. இதற்கான பாதுகாப்புப் பணியில் மத்திய ரிசர்வ் காவல் படை (சி.ஆர்.பி.எப்.) வீரர்களை ஈடுபடுத்தலாம். திருப்பரங்குன்றம் கோவில் அறங்காவலர் குழு மறு உத்தரவு வரும் வரை செயல்பட விதிக்கப்பட்டு இடைநீக்கம் செய்யப்படுகிறது. ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதிகளான நீதிபதி எஸ்.வைத்தியநாதன், எஸ்.பார்த்திபன் கோவில் நிர்வாகம் ஆகியோரிடம் ஒப்படைக்கப்படும்.
இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறினர்.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட நிலையில் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் இன்று அதிகாலை முதல் முருக பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.
இந்நிலையில் மலையின் மேதுள்ள தீபத்தூணில் தீபம் இன்று (28.11.2026) நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் அடங்கிய குழுவின் முன்பு ஏற்றப்பட்டது. “முருகனுக்கு அரோகரா” என பக்தர்கள் கோஷமிட்டனர். தீபம் ஏற்றப்பட்டுள்ள நிலையில் மேளதாளம் முழங்க உற்சாகக் கொண்டாட்டத்தில் பக்தர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டதைதொடர்ந்து, சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பு நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டிருந்தது. அந்த குழுவில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன், மதுரை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, காவல் ஆணையர், சிஆர்பிஎப் ஐஜி, கோவில் பட்டர்கள் உள்பட 13 பேர் இடம்பெற்றிருந்தனர். இந்த வழிகாட்டுதல் குழுவினர் இன்று மாலை 5 மணிக்கு தீபத்தூணில் தீபம் ஏற்றியதை கண்காணித்தனர்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலையில் தீபம் ஏற்றப்படும் நிகழ்வையொட்டி பாதுகாப்பு பணியில் சிஆர்பிஎப் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அதேவேளை, பாதுகாப்பு பணியில் கூடுதலாக 400 சிஆர்பிஎப் வீரர்கள் திருப்பரங்குன்றத்திற்கு வருகை தந்தனர். பெங்களூருவில் இருந்து திருப்பரங்குன்றத்திற்கும் கூடுதல் படையினர் விரைந்தன. திருப்பரங்குன்றம் மலை மற்றும் மலையை சுற்றியுள்ள பகுதிகளில் சிஆர்பிஎப் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டனர்.
முன்னதாக திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கு செல்ல 50 பேருக்கு அனுமதி அளிக்கப்படுவதாக திருக்கோவில் நிர்வாக பொறுப்பாளர்களாக உள்ள நீதிபதிகள் அறிவித்திருந்தனர். இதன்படி பணியாளர்கள், பாதுகாப்பு படையினர் அனுமதி பெற்றவர்கள் உள்ளிட்ட அனுமதிக்கப்பட்ட நபர்களை தவிர்த்து இதர நபர்கள் மலை ஏற தடை விதிக்கப்பட்டிருந்தது.