மேய்ச்சலுக்கு சென்ற 8 ஆடுகளை கொன்ற சிறுத்தை

பேரணாம்பட்டு அருகே மேய்ச்சலுக்கு சென்ற 8 ஆடுகளை சிறுத்தை அடித்து கொன்றது. 3 மாடுகளையும் தாக்கி காயப்படுத்தியது.
மேய்ச்சலுக்கு சென்ற 8 ஆடுகளை கொன்ற சிறுத்தை
Published on

சிறுத்தைகள் நடமாட்டம்

பேரணாம்பட்டு வனசரக பகுதியில் உள்ள பத்தலப்பல்லி, எருக்கம்பட்டு, கோட்டையூர், சேராங்கல், அரவட்லா மலை உள்ளிட்ட காப்பு காடுகளில் கடந்த சில ஆண்டுகளாக 10-க்கும் மேற்பட்ட சிறுத்தைகள், குட்டிகளுடன் நடமாடி வருகின்றன. இந்த சிறுத்தைகள் மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகளை வேட்டையாடி வருகின்றன.

பேரணாம்பட்டு அருகே உள்ள பத்தலப் பல்லி கிராமத்தை சேர்ந்த நரிக்குறவர்கள் ஆட்டோ ராணி, இவரது பெரியப்பா பிருந்தா, சித்தப்பா ரவி ஆகிய 3 பேர் 20 ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இவர்கள் நேற்று முன்தினம் ஆடுகளை வெள்ளைக்குட்டை அருகில் உள்ள கொந்த மேடு வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றனர். மாலையில் 4 பெரிய ஆடுகள், 4 குட்டிகள் காணாமல் போனது.

சிறுத்தை கொன்றது

நேற்று காலை நரிக்குறவர்கள் ஆடுகளை தேடி எருக்கம்பட்டு வனப்பகுதிக்கு சென்று பார்த்த போது காணாமல் போன ஆடுகள் அங்குள்ள மரத்தில் எலும்புக்கூடுகளாக தொங்கியவாறு கிடந்தன. 4 ஆடுகள், 4 குட்டிகளை சிறுத்தை வேட்டையாடி உள்ளது தெரிய வந்தது. இதை பார்த்து நரிக்குறவர்கள் கதறி அழுதனர்.

நேற்று மதியம் பேரணாம்பட்டு - வீ.கோட்டா ரோட்டில் அங்குள்ள ஓட்டல் அருகில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் விவசாய நிலத்தில் பத்தலப் பல்லி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தனது 3 பசு மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது மாடுகள் கத்திய சத்தம் கேட்டு ராஜேந்திரன் மற்றும் சிலர் சென்று பார்த்த போது 3 பசு மாடுகளை சிறுத்தை தாக்கியது தெரிய வந்தது.

இதை பார்த்த அவர்கள் கூச்சலிட்டனர். உடனே அருகிலுள்ள வனப்பகுதிக்குள் சிறுத்தை ஓடிவிட்டது. இதனால் விவசாயிகள், கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com