

ஈரோடு,
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே ஆசனூர் காரப்பள்ளம் சோதனைச்சாவடி பகுதியில், சாலையோரம் நின்று கொண்டிருந்த ஒற்றை காட்டு யானை ஒன்று, அவ்வழியாக வந்த காரை திடீரென தாக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட திம்பம் மலைப்பாதை மற்றும் ஆசனூர் சுற்றுவட்டாரப் பகுதிகள் அடர்ந்த வனப்பகுதியைக் கொண்டுள்ளன. இதனால் உணவு மற்றும் தண்ணீர் தேடி, காடுகளை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் அடிக்கடி இந்த தேசிய நெடுஞ்சாலைக்கு வருவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில், தமிழக-கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே சாலையோரத்தில் ஒற்றை காட்டு யானை ஒன்று நின்றுகொண்டிருந்தது.
அப்போது அவ்வழியாக கார் ஒன்று வந்துள்ளது. காரைக் கண்டதும் ஆவேசமடைந்த அந்த ஒற்றை யானை, திடீரென காரை நோக்கி வேகமாக முன்னேறி வந்து காலைத் தூக்கி தாக்க முயன்றது. இதனால் காரின் ஓட்டுநர் மற்றும் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் சாதூரியமாக செயல்பட்ட ஓட்டுநர் காரை மெதுவாக பின்னோக்கி இயக்கினார். இதனால் காரில் இருந்த பயணிகள் எவ்வித காயமுமின்றி நூலிழையில் உயிர் தப்பினர்.
யானையின் இந்த திடீர் ஆக்ரோஷத்தால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினர். இதனால் ஆசனூர் - தாளவாடி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், காரப்பள்ளம் சோதனைச்சாவடி பகுதியில் நின்றிருந்த யானையை பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விரட்டினர்.
கர்நாடகாவில் இருந்து கரும்புகளை ஏற்றி வரும் லாரிகளை வழிமறித்து கரும்புக்கட்டுகளை தூக்கிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ள இந்த யானைகள், சிறிய வாகனங்களையும் தாக்க முற்படுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் காட்டின் வழியே பயணிக்கும் போது வாகனங்களை நிறுத்தவோ, ஹாரன் அடிக்கவோ அல்லது யானைகளின் அருகில் சென்று புகைப்படம் எடுக்கவோ வேண்டாம் என வனத்துறை அதிகாரிகள் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர்.