சென்னையில் இன்று தொடங்குகிறது மாபெரும் ரேபிஸ் தடுப்பூசி முகாம்

சுமார் 2 லட்சம் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணி நீக்க மருந்து செலுத்தப்பட உள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்க மருந்து செலுத்தும் மாபெரும் முகாம் இன்று (ஆக. 11) தொடங்குகிறது. சென்னை முழுவதும் சுமார் 2 லட்சம் தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Published on

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்க மருந்து செலுத்தும் மாபெரும் முகாம் இன்று (ஆக. 11) தொடங்குகிறது.

30 குழுக்கள் நியமனம்

மண்டலம் மற்றும் கோட்டம் வாரியாக தெருநாய்கள் பிடிக்கப்பட்டு, கால்நடை மருத்துவர்களால் ரேபிஸ் தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணி நீக்க மருந்து செலுத்தப்படும். பின்னர் வண்ண சாயம் மூலம் அடையாளப்படுத்தப்பட்டு, அவை பிடிக்கப்பட்ட அதே இடத்திலேயே மீண்டும் விடுவிக்கப்படும். இதற்காக 30 குழுக்கள் நியமிக்கப்பட்டு, நாள் ஒன்றுக்கு சுமார் 3,000 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

1.47 லட்சம் நாய்களுக்கு ஏற்கனவே தடுப்பூசி

கடந்த ஆண்டு நடைபெற்ற சிறப்பு முகாமில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் 1,47,545 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்க மருந்து செலுத்தப்பட்டது. இந்த ஆண்டும் வளர்ப்பு நாய்கள் மற்றும் பூனைகளுக்கும் இலவசமாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

75 நாட்களில் 2 லட்சம் நாய்களுக்கு தடுப்பூசி

இந்த ஆண்டுக்கான முகாம் முதற்கட்டமாக மண்டலம் 1, 2 மற்றும் 4-ல் தொடங்குகிறது. தொடர்ந்து அனைத்து மண்டலங்களிலும் முகாம் நடத்தப்பட்டு, 75 வேலை நாட்களுக்குள் சுமார் 2 லட்சம் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணி நீக்க மருந்து செலுத்தப்பட உள்ளது.

“ரேபிஸ் இல்லா சென்னை” இலக்கு

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள், Worldwide Veterinary Services (WVS) நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இம்முகாம் செயல்படுத்தப்பட உள்ளது. “வெறிநாய்க்கடிநோய் இல்லா சென்னை” என்ற இலக்கை அடைய பொதுமக்கள், செல்லப்பிராணி உரிமையாளர்கள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் ஒத்துழைக்குமாறு சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com