சென்னையில் நாளை தொடங்குகிறது மாபெரும் ரேபிஸ் தடுப்பூசி முகாம்!

“வெறிநாய்க்கடிநோய் இல்லாசென்னை” என்ற இலக்கை அடைவதற்கு அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
சென்னையில் நாளை தொடங்குகிறது மாபெரும் ரேபிஸ் தடுப்பூசி முகாம்!
Published on

சென்னை,

வெறிநாய்க்கடிநோய்த் தடுப்பூசி (Anti Rabies Vaccination) மற்றும் அக, புற ஒட்டுண்ணி மருந்து செலுத்தும் மாபெரும் அளவிலான முகாம் நாளை (11.08.2026) தொடங்கப்பட்டு 2,00,000 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

ரேபிஸ் தடுப்பூசி முகாம்!

பெருநகர சென்னை மாநகராட்சியின் 2026-2027 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கை, அறிவிப்பின்படி வெறிநாய்க்கடி நோய் பாதிப்பிலிருந்து பொது மக்களை காத்திடவும், வெறிநாய்க்கடி நோய் இல்லா சென்னை மாநகரை உருவாக்கிடவும் அனைத்து தெரு நாய்களுக்கும் வெறிநாய்க்கடிநோய்த் தடுப்பூசி (Anti Rabies Vaccination) மற்றும் அக, புற ஒட்டுண்ணி மருந்து செலுத்தும் மாபெரும் அளவிலான முகாம் (Mass Anti Rabies Vaccination and Endectoparasiticidal camp) நாளை (11.08.2026) தொடங்கப்படவுள்ளது.

மண்டல வாரியாக, கோட்டம் வாரியாக தெரு நாய்களை அவை வசிக்கும் தெருக்களுக்கே சென்று நாய் பிடிக்கும் பணியாளர்கள் மூலம் வலைகளைக் கொண்டு நாய்களைப் பிடித்து கால்நடை மருத்துவரால் அவற்றிற்கு வெறிநாய்க்கடிநோய்த் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கம் மருந்து செலுத்தப்படும். பின்னர் அந்த நாய்களுக்கு வண்ண சாயம் (Vegetable dye) தெளித்து அடையாளப்படுத்தி அவை மீண்டும் அதே இடத்திலேயே விடுவிக்கப்படும்.

30 குழுக்கள் நியமனம்

இம்முகாமின் போது மண்டலங்களிலுள்ள அனைத்து தெருக்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் உள்ள தெருநாய்களுக்கும் வெறிநாய்க்கடிநோய்த் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தப்படும்.

ஒவ்வொரு குழுவும் நாள் ஒன்றிற்கு சுமார் 100 தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில் 30 குழுக்கள் நியமிக்கப்பட்டு நாள் ஒன்றிற்கு தோராயமாக 3000 தெரு நாய்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. தலா 10 குழுக்களை பயன்படுத்தி ஒரே சமயத்தில் 3 மண்டலங்களில் இந்த சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.

1,47,545 தெருநாய்களுக்கு தடுப்பூசி

வளர்ப்பு நாய்கள் மற்றும் பூனைகளின் உரிமையாளர்களும் தங்களின் செல்லப்பிராணிகளுக்கு இம்முகாமினை பயன்படுத்தி இலவசமாக ரேபிஸ் நோய்த் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து தெருநாய்களுக்கும் இலவச ரேபிஸ் நோய்த் தடுப்பூசியும் மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கம் மருந்து செலுத்தும் மாபெரும் அளவிலான திட்டம் கடந்த 09.08.2025 அன்று தொடங்கப்பட்டு 1,47,545 தெருநாய்களுக்கு ரேபிஸ் நோய்த் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கம் மருந்து செலுத்தப்பட்டது.

நாளை தொடங்கும் முகாம்

இவ்வாண்டு தெருநாய்களுக்கு ரேபிஸ் நோய்த் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கம் மருந்து செலுத்தும் மாபெரும் அளவிலான முகாம் நாளை (11.08.2026) முதல் 1, 2 மற்றும் 4 ஆகிய மண்டலங்களில் தொடங்கப்படவுள்ளது.

இத்திட்டத்தை சிறப்புடன் செயல்படுத்துவது குறித்து 10.08.2026 இன்று ஆணையர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் இணை ஆணையர் (சுகாதாரம்), தலைமை கால்நடை மருத்துவ அலுவலர் மற்றும் கூடுதல் தலைமை கால்நடை மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மருத்துவர்கள்/ பயிற்சி மருத்துவர்களைப் பயன்படுத்தி Worldwide Veterinary Services (WVS) நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இம்முகாமினை தொய்வின்றி நடத்திட ஆணையர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.

2,00,000 நாய்களுக்கு தடுப்பூசி

இச்சிறப்பு முகாம் மண்டலம் 1ல் 14 நாட்களும் மண்டலம் 2ல் 9 நாட்களும் மற்றும் மண்டலம் 4ல் 14 நாட்களும் நடத்தப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து அனைத்து மண்டலங்களிலும் இம்முகாம் நடத்தப்பட்டு 75 வேலை நாட்களுக்குள் சுமார் 2,00,000 நாய்களுக்கு ரேபிஸ் நோய்த் தடுப்பூசியும் மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் ஊசியும் (Anti Rabies Vaccination and Endectoparasiticidal) அளிக்கப்படவுள்ளது.

இந்த சிறப்பு முகாம்கள் மூலம் “வெறிநாய்க்கடிநோய் இல்லாசென்னை” (Rabies Free Chennai) என்ற இலக்கை அடைவதற்கு பொது மக்களும், செல்லப்பிராணிகளின் உரிமையாளர்களும் மற்றும் விலங்கு நல ஆர்வலர்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com