மெரினா சவாரி குதிரைகளுக்கு 'மைக்ரோ சிப்' பொருத்தம்

சென்னை மெரினா சவாரி குதிரைகளின் உடல்நிலையை கண்காணிப்பதற்காக ‘மைக்ரோ சிப்' பொருத்தும் திட்டத்தை கிருத்திகா உதயநிதி தொடங்கி வைத்தார்.
மெரினா சவாரி குதிரைகளுக்கு 'மைக்ரோ சிப்' பொருத்தம்
Published on

சென்னை,

சென்னை மெரினா உள்பட கடற்கரைகளில் குதிரை சவாரி செய்வதில் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். எனவே கடற்கரை பகுதிகளில் குதிரை சவாரி தொழில் கொடிக்கட்டி பறக்கிறது. மேலும் இந்த குதிரைகள் திருமண ஊர்வலம் போன்ற நிகழ்ச்சிகளும் அழைத்து செல்லப்படுகின்றன. ஆனால் இந்த குதிரைகள் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை என்று தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன.

இதையடுத்து தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம், கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடை அறிவியல் துறை, தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகம், தமிழ்நாடு போலீஸ் துறை, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியவை இணைந்து சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் இந்த குதிரைகளுக்கு மருத்துவ முகாம் நேற்று நடத்தப்பட்டது.

இந்த முகாமில், இந்த குதிரைகளுக்கு ஆண்டுதோறும் நோய்களை தடுப்பதற்கான தடுப்பூசி முறையாக செலுத்தப்படுகிறதா? உடல்நிலை எவ்வாறு உள்ளது? என்பதை கண்டறிவதற்காக 'மைக்ரோ சிப்' பொருத்தும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனை விலங்கு நல ஆர்வலரும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனைவியுமான கிருத்திகா உதயநிதி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்பு துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் மங்கத் ராம் சர்மா, கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடை அறிவியல் துறை இயக்குனர் லட்சுமி, பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு விலங்கு நல வாரியத்தின் கவுரவ உறுப்பினர் ஸ்ருதி வினோத் ராஜ் மற்றும் விவேகானந்தன் உள்பட கால்நடை மருத்துவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின் போது கிருத்திகா உதயநிதி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "மெரினா கடற்கரை பகுதி சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் இருக்கிறது. இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வாக உதயநிதி வந்த பின்னர்தான், 'இந்த குதிரைகளுக்கு பிரச்சினை இருக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. கொரோனா காலகட்டத்தில் இந்த குதிரைகளை வளர்க்க முடியாமல் அதன் உரிமையாளர்கள் கஷ்டப்பட்ட நேரத்தில் நாங்கள்தான் உதவி செய்தோம். தற்போது இந்த குதிரைகளுக்கு நல்வாழ்வு முகாம் நடத்தப்படுகிறது" என்றார்.

கூடுதல் தலைமை செயலாளர் மங்கத் ராம் சர்மா கூறும்போது, "சென்னையில் 200 குதிரைகளுக்கு 'மைக்ரோ சிப்' பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த முகாமுக்கு வராத குதிரைகளுக்கு நேரில் சென்று இதனை பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com