'ஒரே நாடு ஒரே தேர்தல்' சட்டசபையை கலைப்பதற்கான நடவடிக்கை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டசபையை கலைப்பதற்கான நடவடிக்கை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.
'ஒரே நாடு ஒரே தேர்தல்' சட்டசபையை கலைப்பதற்கான நடவடிக்கை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்
Published on

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநாடு நேற்று நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு நடந்தது. மாவட்ட செயலாளர் செல்லசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அந்தோணி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவில் நாளுக்கு நாள் வன்முறை அதிகரித்து வருகிறது. மணிப்பூரில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சூறையாடப்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் இடிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி விவாதிக்க பிரதமரை அழைத்த போது எந்த பதிலும் இல்லை. நாட்டில் ஜனநாயகம் அழிக்கப்பட்டு வருகிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல்

முன்னாள் ஜனாதிபதி தலைமையில் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த நாட்டில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கோட்பாடு எந்த காலத்திலும் பொருந்தாது. சட்டசபையை கலைக்கும் இத்தகைய நடவடிக்கை ஏற்புடையதல்ல. கடற்கரை பாதுகாப்பு திருத்த சட்டம் மற்றும் வன பாதுகாப்பு உரிமை திருத்த சட்டம் ஆகியவற்றை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்.

அரசுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். பேரிடர் காலங்களில் கடலுக்கு செல்லும் மீனவர்களை மீட்க குமரியில் ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும். மலைகளை உடைத்து கனிம வளங்களை கொள்ளையடிக்கும் செயலை தடுக்க அரசு நடவடிக்கை வேண்டும். குமரி மாவட்டத்தில் மண்டல புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும்.

ரெயில் மறியல்

மத்திய அரசின் மக்கள் விரேத போக்கை கண்டித்து தமிழகம் முழுவதும் வருகிற 7-ந் தேதி ரெயில் மறியல் போராட்டங்கள் நடத்தப்படும். இந்தியா கூட்டணியின் சாதனையால் கியாஸ் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணியை கண்டு மத்திய அரசு பயந்துள்ளது.

கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய ரூ.15.50 லட்சம் கோடியை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது. இந்த ஆண்டு 5 மாநிலங்களில் நடக்க இருக்கும் தேர்தலில் பா.ஜனதா படுதோல்வி அடையும். இந்திய கூட்டணி தேர்தலில் மகத்தான வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநாட்டில் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், முன்னாள் எம்.பி. பெல்லார்மின் உள்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com