சினிமாவை, சினிமாவாக மட்டுமே பார்க்க வேண்டும்

லியோ திரைப்பட விவகாரத்தில் சினிமாவை, சினிமாவாக மட்டுமே பார்க்க வேண்டும் என்று கோவையில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
சினிமாவை, சினிமாவாக மட்டுமே பார்க்க வேண்டும்
Published on

லியோ திரைப்பட விவகாரத்தில் சினிமாவை, சினிமாவாக மட்டுமே பார்க்க வேண்டும் என்று கோவையில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

லியோ விவகாரம்

தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று கோவை வந்தார். அவர், விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

லியோ திரைப்பட விவகாரம் பெரிதாகி வருகிறது. என்னை பொருத்தவரை அனைவருக்கும் பொதுவான நடைமுறை இருக்க வேண்டும்.

எந்த நடிகர்கள் நடித்தாலும், எந்த தயாரிப்பு நிறுவனங்கள் தயாரித்தாலும், ஒரே மாதிரியான நடைமுறை கடைபிடிக்கப்பட வேண்டும்.

குறிப்பிட்ட நபர்களுக்கான நடைமுறையாக இருக்கக்கூடாது. புதுச்சேரியில் கலெக்டர் 7 மணிக்கு அனுமதி அளித்த பிறகும், அழுத்தம் காரணமாக 9 மணிக்குதான் திரையிட முடிந்தது.

சிலர் விளையாட்டை, விளையாட்டாக பார்க்க வேண்டும் என்று கூறுகின்றனர். அப்படி என்றால் சினிமாவை, சினிமாவாகத்தானே பார்க்க வேண்டும்.

ஜெய் ஸ்ரீராம் என்று கூறிவிட்டு, மற்ற மதத்தினர் எதுவும் கூறக்கூடாது என்று சொல்லவில்லை. யாருக்கு எதை சொல்லி வெற்றியை கொண்டாட தோணுகிறதோ, அதை சொல்லி கொண்டாடட்டும். அதில் தவறு இல்லை.

கண்டனம்

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜைக்கு மதம் சார்ந்த படங்கள் வைக்கக்கூடாது என்று திருப்பூர் மருத்துவ கல்லூரி முதல்வர் அறிவித்துள்ளார். அரசு அதிகாரிகள், இப்படி பேசினால்தான் இந்த அரசுக்கு பிடிக்கும் என்று இவ்வாறு பேச ஆரம்பித்து உள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ஒட்டுமொத்தமாக மதம் சார்ந்த உணர்வுகளை ஒதுக்கி தள்ளுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. தமிழக அரசு இதற்கு சரியான விளக்கம் அளிக்க வேண்டும். குறிப்பாக இப்படி ஒருதலைபட்சமாக நடந்து கொள்பவர்கள் மீது பதவி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏற்றுக்கொள்ள முடியாது

நீட் தேர்வு மூலம் மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கு தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். தி.மு.க. அரசு இதை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்துகிறது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பையும் மறந்து இதுபோன்று நடந்து கொள்வது சரியில்லை.

மகளிர் இட ஒதுக்கீடு இப்போது வராது என்று கூறுவது தவறு. இதனை கனிமொழி போன்றவர்கள் கூட கண் துடைப்பு என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

துணிச்சல் இல்லை

நான் மட்டுமல்ல பிரதமரும், காமராஜரின் செயல்பாடுகளை ஏற்றுக்கொள்கிறார். காமராஜர் உயிரோடு இருந்திருந்தால் கருப்பு பண ஒழிப்பிற்கு என்னை பாராட்டிருப்பார் என்று பிரதமர் கூறியுள்ளார். சோதனைகள் மூலம் பெட்டி பெட்டியாக பணம் எடுத்த பிறகும் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறுகின்றனர். இதை மக்கள் நம்ப மாட்டர்கள். இது அனைத்தும் அவர்களின் பணம்.

காவிரி விவகாரத்தை பொருத்தவரை எதிர்க்கட்சியாக இருந்தபோது இருந்த துணிச்சல் ஆளும் கட்சியாக வந்த பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காணாமல் போய்விட்டது. உலகின் எந்த பகுதியில் இந்தியர்கள் பிரச்சினையில் இருந்தாலும், அவர்களை மத்திய அரசு பத்திரமாக மீட்டு வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com